Friday, 1 July 2016

குடை மிளகாய் பொரியல்(Capsicum Poriyal)


 தேவையான பொருட்கள்
குடை மிளகாய்                           1(பெரியது)
வெங்காயம்                                 1
தக்காளி                                         1
எண்ணெய்                                   தேவையான அளவு
கடுகு                                                1/4 தேக்கரண்டி
சீரகம்                                               1/ 4 தேக்கரண்டி
பச்சை பட்டாணி  (frozen )                     1/4 கப்
ஸ்வீட் கார்ன் (sweet corn)            1/4 கப் (optional )
மிளகாய் தூள்                                1/2 தேக்கரண்டி
கொத்தமல்லி பொடி                  1/2 தேக்கரண்டி
கரம் மசாலா தூள்                        1/2 தேக்கரண்டி
இஞ்சி  விழுது                                 1/4 தேக்கரண்டி
உப்பு                                                  தேவையான அளவு
தண்ணீர்                                          தேவையான அளவு
கொத்தமல்லி தழை                    சிறிதளவு

செய்முறை :
முதலில்  குடை மிளகாயை சிறு சிறு துண்டுகளாக்கவும், வெங்காயத்தை பொடியாக நறுக்கி வைக்கவும். தக்காளியை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
ஒரு வாணலியில் சிறிது எண்ணெய்  விட்டு காய்ந்ததும் கடுகு, சீரகம் போட்டு பொரிந்ததும் வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது போட்டு நன்கு வதக்கவும்.சிறிதளவு உப்பு சேர்த்து வதக்கினால் வெங்காயம் சீக்கிரம் வதங்கும்.
பின்பு தக்காளி சேர்த்து வதக்கவும். தக்காளி நன்கு மசிந்தவுடன் பொடி வகைகளை சேர்த்து வதங்கியவுடன் நறுக்கி வைத்துள்ள குடை மிளகாய் , பட்டாணி, கார்ன் சேர்த்து வதக்கவும்.  தேவைக்கேற்ப உப்பை சேர்த்து வதக்கியவுடன் சிறிது  தண்ணீர் சேர்த்து மூடி வேக வைக்கவும். காய் நன்கு வெந்ததும் நறுக்கிய கொத்தமல்லி இலை தூவி  இறக்கவும்.

குறிப்பு : மிளகாய் தூள் மற்றும் கொத்தமல்லி தூள் க்கு பதிலாக சாம்பார் பொடி யையும் சேர்க்கலாம்.
frozen peas க்கு பதிலாக காய்ந்த பட்டாணியையும் வேக வைத்து சேர்க்கலாம்.

இது சாதத்துடன் சேர்த்து சாப்பிட நன்றாக இருக்கும். சிறிது நீர் அதிகம் விட்டு gravy போல் செய்து சப்பாத்தி , ரொட்டி போன்றவற்றுடன் சேர்த்தும் சாப்பிடலாம்.


வேப்பம்பூ மாங்காய் பச்சடி(veppamboo mango pachadi)

இது தமிழ் வருட பிறப்பின் பொழுது செய்ய வேண்டிய முக்கிய நெய்வேத்தியம் ஆகும்.
இதில் அறுசுவைகளும் கலந்து இருக்கும்.


தேவையான பொருட்கள்:

மாங்காய்(துருவியது)         1 கப்
வேப்பம்பூ                           சிறிதளவு
வெல்லம்                             1/4 கப்
தேங்காய் துருவல்               1/2 கப்
உப்பு                                   தேவையான அளவு
கடுகு                                  1/4 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு                  1/4 தேக்கரண்டி
பெருங்காயத்தூள்               1/4 தேக்கரண்டி
சிவப்பு மிளகாய்                 1 அல்லது 2
எண்ணெய்                          தாளிக்க 
கறிவேப்பிலை                     1 கொத்து 


செய்முறை :

முதலில் மாங்காயை தோல் நீக்கி பொடியாக செதுக்கி வைத்துக் கொள்ள வேண்டும். அதை ஒரு பாத்திரத்தில் நீர் விட்டு வேக வைக்கவும்.
நன்றாக வெந்ததும் கரண்டி அல்லது மத்தால் நன்றாக மசித்துக்கொள்ளவும்.
பின்பு உப்பு, பொடித்த வெல்லம் சேர்த்து ஒன்றாக சேர்ந்து  வரும் அளவு கொதிக்க விடவும்.
பின்பு துருவிய தேங்காயை சேர்த்து கிளறி இறக்கவும்.
பின்பு சிறிது எண்ணையில் கடுகு, சிவப்பு மிளகாய், உளுத்தம்பருப்பு பெருங்காய தூள் , வேப்பம்பூ, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து பச்சடியில் சேர்த்து கலந்து பரிமாறவும்.

குறிப்பு: மாங்காய் வேக வைக்கும் பொழுது நீரை மாங்காய் மூழ்கும்  அளவு சேர்த்தால் போதுமானது, அதிகம்  சேர்த்தால் பச்சடி மிகவும் தளர்வாகிவிடும்.
வேப்பம்பூவை சிறிது நெய் அல்லது எண்ணெயில் தனியாக வதக்கியும்  சேர்க்கலாம்.
    

Tuesday, 26 April 2016

இழை கோலம்(அரிசி மா கோலம்)

பொதுவாக பண்டிகை நாட்களிலும், சுப விழாக்களின் பொழுதும் இந்த ஈர மாவால் கோலம் போடுவார்கள்.

மாவு தயார் செய்யும் முறை:

பச்சரிசியை கழுவி நீரில் குறைந்தது 5 மணி நேரம் அல்லது ஓர் இரவு ஊற வைத்துவிட வேண்டும். பின்பு அதை mixie அல்லது grinder ல் மைய அரைத்து தோசை மாவு பதத்திற்கு நீர் விட்டு  கரைத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
 பின்பு ஒரு நல்ல வெள்ளை துணியை நீர்ணனைது பிழிந்து விட்டு இந்த மாவில் நனைத்து நடு விரலால் கோலம் இட வேண்டும்.
கொடு இழுக்க சிறிது  சிறிதாக துணியில் உள்ள மாவை பிழிய இழை அழகாக வரும்.

பூஜை செய்யும் இடங்களில் பொதுவாக மாட கோலம் இடுவது வழக்கம். பூஜைகளுக்கு நான்கு இழை கோலமாக போடுவதே சிறப்பு.

கோலம் தரையில் இருந்து பெயராமல் நன்றாக பிடிக்க சிறிது மைதா மாவை கலந்து கோலம் போடுகின்றனர்.
அதோடு இதில் சிறிது வண்ண பொடிகளை கலந்தும் போடுவார். ஆயினும் வெள்ளையாக வெறும் அரிசி மாவில் போடுவதே சிறப்பு.

தமிழ் வருட பிறப்பு

இது புது வருடத்தின் முதல் பண்டிகையாக தமிழர்களால்  கொண்டாடபடுகிறது. தமிழ் மாதங்கள் சூரியனின் சுழற்சியின் அடிப்படையில் வரையருக்க பட்ட ஒன்று ஆகும்.

இந்த சித்திரை முதல் தேதியில் கடவுளுக்கு சிறப்பு பூஜைகள் செய்து வரும் புது வருடம் சிறப்பாக இருக்க அருள் புரியுமாறு  வேண்டிக்கொள்வர்.

முதல் நாளே வீட்டை சுத்தபடுத்தி ஈர மாகோலம் இட வேண்டும். விளக்கு முதலிய பூஜை பொருட்களை சுத்தபடுத்தி தயார் செய்து வைத்து  விட வேண்டும். புத்தாண்டு அன்று அதிகாலையில் எழுந்து பூஜை கு ஏற்ற நல்ல நேரத்தில் கடவுளுக்கு படைக்க வேண்டும்.
பொதுவாக புத்தாண்டு க்கு அறுசுவையும் கலந்து இருக்கும் விதமாக வடை பாயசம் செய்வதோடு வேப்பம்பூ மாங்காய் பச்சடியும், வடபருப்பும்  செய்து இறைவனுக்கு படைப்பது வழக்கம். வேம்பம்பூ ரசமும் செய்யலாம்.
அதோடு நீர் மோர், பானகம் போன்றவையும் செய்வார்கள். 

புத்தாண்டு அன்று ஒவ்வொரு வீட்டில் அந்த வருடத்தின் புது பஞ்சாங்கத்தையும் வைத்து  படைத்து வீட்டில் உள்ள பெரியவர்கள் அதை படிப்பார்கள். புத்தாண்டு கு முன்பே பஞ்சாங்கம் வாங்கி இருந்தாலும் அதை படிக்காமல் பிரிக்க கூடாது என்று என் அம்மா சொல்லுவார்கள்.

அன்றைய தினம் மாலை வேளை யில் உள்ளூர் கோவில்களில் ப்ரோகிதர் போன்றோர் பஞ்சாங்கம் படித்து பலன் கூறுவார்கள். பிறக்கும் வருடம் எத்தகைய வருடமாக அமையும் என்றும, எந்தந்த  ராசிக்கு சிறப்பாக அமையும், பரிகாரம் செய்ய வெடிய ராசிகள் போன்ற விஷயங்களையும் மழை வெப்பம் போன்ற பொதுவான விஷயங்களையும் கூறுவார்கள்.

எங்கள் கிராமத்தில் விவசாயமே முக்கிய தொழில் என்பதால் அன்றைய தினம் முழுவதும் அந்த வருடத்திய பலன்களை வைத்து விவசாயம் எப்படி இருக்கும் என்று பெரியவர்கள் பேசிக்கொள்வது இன்றும் என் நினைவில் உள்ளது.



தமிழர் பண்டிகைகள்

நம் தமிழர் வாழ்வில்  பண்டிகைகளுக்கு குறைவே இல்லை. ஒவ்வொரு பண்டிகைக்கும் ஒவ்வொரு கொண்டாடும்  முறைகள் உண்டு, ஆனால் இன்று பலருக்கும் அந்த முறைகள் தெரிவதில்லை.

இன்றைய சூழலில் என் அம்மா அறிந்தவற்றுள் பாதி அளவு கூட எனக்கு தெரிவதில்லை, எனவே என் அடுத்த தலைமுறைக்கு என்னில் பாதியாவது கொண்டு செல்லும் முயற்சியாகவே இந்த பதிவு.

இதில் எனக்கு தெரிந்த, எங்கள் குடும்பங்களில் உள்ள முறைகளையும் அந்தந்த பண்டிகைகளின் சிறப்புகள் போன்றவற்றை முடிந்த அளவு விளக்கமாக கொடுத்துள்ளேன்.

2. சித்ரா பௌர்ணமி

Friday, 15 August 2014

செவ்வாய் பிள்ளையார் கொழுக்கட்டை

தேவையான பொருட்கள்:

பச்சை அரிசி                 1 கப்
வெந்நீர்                             தேவையான அளவு
தேங்காய் துருவல்        1  கப்

செய்முறை:

அரிசியை நன்றாக கழுவி பின் ஒரு துணியில் பரப்பி உலர வைக்கவும்.
நன்கு உலர்ந்ததும் அதை mixie யில் மாவாக அரைத்து சலித்துக்கொள்ளவும். சலித்த மாவில் தேங்காய் துருவலை சேர்த்து சிறிது சிறிதாக நீர் விட்டு பிசையவும்.
பின்பு அதை பிடி கொழுக்கட்டைகளாகவும் அடை கொழுக்கட்டைகளாகவும் செய்து, இட்லி தட்டில் புங்க இலைகளை பரப்பி அதன் மேல் இக்கொழுக்கட்டைகளை வைத்து ஆவியில் வேக வைத்து எடுக்கவும்.
இதற்கு உப்பு சேர்க்க கூடாது. தேங்காய் சேர்ப்பதால் இது தனி சுவையாகவே இருக்கும்.

கொழுக்கட்டை அடை செய்வதற்கு முதலில் கொழுக்கட்டை மாவை வட்ட வடிவமாக 1/2 இன்ச் தடிமனாக தட்டவும். பின்பு மேலும் கொஞ்சம் மாவை எடுத்து சிறு சிறு உருண்டைகளாக (சீடை அளவுக்கு) செய்து தட்டி வைத்துள்ள அடியின் மேல் வைத்து இட்லி தட்டில் ஒவ்வொரு அடியாக  வேக வைத்து எடுக்கவும்.




செவ்வாய் பிள்ளையார் வழிபாடு-Chevvai Pillaiyaar Vazhipadu


குடும்பம் செழிப்பதற்கும் குடும்பத்தினரின் நலனுக்காகவும் பெண்கள் செய்யும் ஒரு வழிபாடு இது. இன்று பலருக்கும் தெரியாத ஒரு வழிபாடாகவும் மாறி விட்டது.

இது ஆடி, தை, மாசி மாதங்களில் வரும் செவ்வாய் கிழமைகளில் செய்யும் ஒரு பூஜை. இந்த மூன்று மாதங்களில் வரும் ஏதேனும் ஒரு செவ்வாய் கிழமையில் செய்தாலே போதுமானது. இவ்வழிப்பாட்டிற்கு ஒரு சொல்லடையும் உண்டு 
"அசந்தா ஆடியிலும் தட்டினா தையிலும் மறந்தா மாசியிலும்"  இவ்வழிபாடு செய்ய வேண்டும் என்று கூறுவார்கள். 

இதில் ஆண்கள் கலந்து கொள்வதற்கு அனுமதி இல்லை. இது பெண்கள் மட்டுமே செய்ய வேண்டும். முன்னிரவு நேரத்திலேயே இப்பூஜையை செய்வது வழக்கம். (வீட்டில் உள்ள ஆண்கள் உறங்கிய பிறகே செய்ய வேண்டும்.)

இது தமிழ் மூதாட்டி ஔவையார் சொல்லி கொடுத்து விநாயகரை நினைத்து செய்வதால் இதை ஔவையார் பூஜை என்றும் சொல்வதுண்டு.

இப்பூஜையின்  முக்கிய நெய்வேத்தியமாக வைப்பது உப்பில்லா கொழுக்கட்டையாகும்.

பூஜை செய்யும் முறை:


பூஜை செய்யும் நாள் அன்று வீட்டை துடைத்து சுத்தம் செய்த பின், பூஜை செய்யும் இடத்தில் மாக்கோலம்  இடுதல் வேண்டும். பொதுவாக எங்கள் ஊரில் அக்கம் பக்கத்துக்கு வீட்டு பெண்கள் சேர்ந்து ஒரே வீட்டில்  ஒன்றாக கூடி செய்வது வழக்கம்.

இப்பூஜையில்  செய்யப்படும் உப்பில்லாகொழுக்கட்டை மிகவும் விசேஷமானது. இதனை வீட்டில் உள்ள பெண்கள் மட்டுமே உண்ண வேண்டும். ஆண்களுக்கு தர கூடாது.

இப்பூஜைக்கு  புங்க மர இலைகளை இட்லி தட்டில் வைத்து  அதன் மேல் கொழுக்கட்டைகளை செய்து வேக வைக்க வேண்டும்.
பொதுவாக செய்யும் பிடி கொழுக்கட்டையோடு அல்லாமல் கொழுக்கட்டை அடை செய்வது மிக முக்கியமான ஒன்றாகும்.

முதலில் மாவை வட்ட வடிவமாக தட்டி அதன் மேல் சிறு சிறு உருண்டை  வடிவ கொழுக்கட்டைகளை செய்து வேக  வைத்து படைக்க வேண்டும்.

பூஜையில் எத்தனை பெண்கள் கலந்து கொள்கின்றனரோ அத்தனை அடை கொழுக்கைடைகளை நெய்வேத்தியம் செய்து  அவர்கள் மட்டும்  பூஜை முடிந்த உடனேயே உண்டு விட  வேண்டும்.

இக்கொழுக்கட்டைகளில் உப்பில்லாவிடினும்  தேங்காய் நிறைய சேர்ப்பதினால் ருசியாகவே இருக்கும்.

(கொழுக்கட்டை செய்யும் முறை இத்திரியில் கொடுக்கப்பட்டுள்ளது.
செவ்வாய் பிள்ளையார் கொழுக்கட்டை)

ஒரு நுனி இலையில் பசுஞ்சாணத்தால்  பிள்ளையார் பிடித்து வைத்து புங்க இலைகளையும் புளிய மர இலைகளையும் பரப்பி அதன் மேல் செய்து வைத்த அடை கொழுக்கட்டைகள், மற்றும் வெற்றிலை, பாக்கு, பழங்களோடு தேங்காய் உடைத்து வைத்து விநாயகரையும் ஔவையாரையும் நினைத்து  படைக்க  வேண்டும்.
அத்தோடு ஒரு தேங்காய் மூடியில் சிறிது தேங்காயை துருவி வைத்து கொழுக்கட்டைகளுடன்  சேர்த்து நெய்வேத்தியம் செய்ய வேண்டும்.
இத்தேங்காய் பூவையும் பெண்கள் மட்டுமே உண்ணுதல் வேண்டும்.

பொதுவாக பூஜைகளில் கலந்து கொள்பவர்களில் வயதிலும் அனுபவத்திலும் பெரியவர்களே முன்னின்று செய்வார். அவரே இப்பூஜையில்  மிக முக்கியமான ஒன்றான அவ்வையார் கதையை கூறுவார். கேட்பவர்களில் ஓரிருவர் ஒரு புங்க அல்லது  புளிய மரகுச்சி ஒன்றால் கதை கேட்பதற்கு அறிகுறியாக('ம்'  கொட்டுவது போல் ) ஒரு பாத்திரத்தில் மெதுவாக தட்டி கொண்டே இருப்பர். இக்கதை மிக மிக ரகசியமாது :) .இதனை பூஜையின் பொழுது மட்டுமே சொல்லி கேட்க வேண்டும்.இது இப்பூஜையின் வரலாற்று ஆரம்பத்தை சொல்லும் கதையாகும்.இதனை  மூன்று முறை சொல்லி சூடம் ஏற்றி ,நெய்வேத்தியம் செய்து படையலை முடிக்க வேண்டும்.

அடுத்த நாள் விடியற் காலையிலேயே எழுந்து இந்த பூஜை செய்த இடத்தை சுத்தம் செய்து பிள்ளையார் மற்றும் பயன்படுத்திய இலைகளை யார் கண்ணிலும் படாமல் எடுத்து சென்று நீரில் கரைத்து விட வேண்டும்.

பூஜை செய்த நாளுக்கு மறுநாள் (புதன் கிழமை) யாருக்கும் எந்த பொருளையும் கடனாகவோ, தானமாகவோ தருதல் கூடாது.

(இது என் அம்மா செய்ய அருகில் இருந்து பார்த்து தெரிந்து கொண்டவை ஆகும். இப்பூஜையை  பற்றி மேலும் அறிந்தவர்கள் தயவு செய்து பின்னூட்டத்தில் பகிர்ந்து கொள்ளவும்)