காரடையான் நோன்பு தமிழ் நாட்டில் பெண்களால் கடைபிடிக்க படும் ஒரு நோன்பு விழா. இது தங்கள் கணவரின் நலனுக்காகவும், அவர் தங்களை விட்டு ஒரு பொதும் பிரியாதிருக்கவும் திருமண மான பெண்கள் அம்மனை பிரார்த்திக்கும் ஒரு நோன்பு. திருமணம் ஆகாத பெண்கள் நல்ல கணவர் கிடைக்கவும், இந்த நோன்பை நோற்பது வழக்கம். இது ஒவ்வொரு வருடமும் தமிழ் மாதமான மாசி முடிந்து பங்குனி துவங்கும் நேரத்தில் செய்யப்படும் பூஜை. அன்றைய நாள் சூரிய உதயத்தில் இருந்து உண்ணா நோன்பு இருந்து , மாசி முடிந்து பங்குனி துவங்கும் நேரத்தில் கார அடை (காரடையான் நோன்பு அடை) செய்து இறைவனுக்கு படைத்து விரதத்தை முடிக்க வேண்டும்.
நோன்பு அடை செய்முறைக்கு பின் வரும் லிங்க்ஐ சொடுக்கவும்.
காரடையான் நோன்பு அடை செய்முறை மற்றும் வீடியோ.
பூஜை நேரம்:
இது முன்பே குறிப்பிட்டது போல மாசி முடிந்து பங்குனி மாதம் பிறக்கும் பொழுது செய்யப்படும் பூஜை. எனவே ஒவ்வொரு வருடமும் பூஜை நேரம் மாறுபட வாய்ப்புள்ளது.
இந்த வருடம் பங்குனி மாதம் நள்ளிரவு நேரம் பிறக்கிறது. இரவு நேரங்களில் பூஜை செய்வது அத்தனை உகந்தது அல்ல. எனவே இந்த வருடம் இரவு 7 மணி முதல் 8 மணிக்குள் பூஜையை முடித்து விட வேண்டும்.
March 14 2018 - 7 pm to 8 pm
இந்த நேரத்தில் பூஜை செய்ய முடியாதவர்கள் அடுத்து பங்குனி மாதத்தில் வரும் முதல் செவ்வாய் அல்லது வெள்ளி கிழமைகளில் நல்ல நேரத்தில் செய்யலாம்.
நோன்பு பின் உள்ள கதை :
முதலில் இந்த நோன்பின் பின் குறிப்பிடப்படும் கதையை சுருக்கமாக பார்க்கலாம்.
முன்னொரு காலத்தில் சாவித்ரி என்ற ராஜ குல பெண் ஒரு வருடமே தன் தன் கணவனின் ஆயுட்காலம் என்று அறிந்தும் சத்தியவானை விரும்பி மணந்து சந்தோஷமாக வாழ்த்து வந்தாள். அரண்மனை சுக போகங்களுக்கு பழகி இருந்தாலும் கணவனே கண் கண்ட தெய்வம் என்று அவனுடன் அன்பாக வாழ்ந்து வந்தாள்.
இவ்வாறு சென்று கொண்டிருந்த வாழ்வில், சத்தியவானின் இறுதி நாளும் வந்தது. எமதர்மன் தன் பாச கயிற்றை வீசி சத்தியவானின் உயிரை பறித்து கொண்டு சென்றார். பத்தினி பெண்ணான சாவித்ரியின் கண்களுக்கு எமன் தெரியவே அவரை விடாமல் பின் தொடர்ந்து சென்றாள். சாவித்ரியின் தைரியத்தையும், கணவனின் மேல் கொண்ட அன்பையும் கண்டு மனம் கனிந்த எமராஜா அவள் கண்களுக்கு காட்சி கொடுத்து அவளை இது தான் விதி, முன்பே எழுதப்பட்டது , அதனால் உன் கணவனின் உயிரை திரும்ப பெற முடியாது, எனவே நீ திரும்பி செல் என அறிவுறுத்தினார்.
கற்புக்கரசி சாவித்ரியோ அவரின் கட்டளையை மீறி, திரும்பி போக மறுத்தாள். அவளின் பக்தி மற்றும் அன்பையும் கண்டு இதயம் கனிந்த எமன் சாவித்ரியிடம், உன் கணவனின் உயிரை தவிர வேறு ஏதேனும் வரம் கேள் தருகிறேன் என்றார். அன்பும் பண்பும் அறிவு கூர்மையும் ஒருங்கே பெற்ற சாவித்ரி எமனிடம் என் குலம் வாழை அடி வாழையாக தழைக்க வேண்டும், அதற்கு வரம் தாருங்கள் என்றாள். எமனும் சற்றும் யோசிக்காமல் அவளுக்கு அந்த வரத்தினை தந்தார்.
குழந்தை இல்லாமல் இருந்த சாவித்ரிக்கு, அவள் கேட்ட வரம் நிறை வேற வேண்டுமானால் அவள் கணவன் உயிருடன் வர வேண்டும் என்று சாவித்ரி கூறியதை கேட்ட எமதர்மன் அதிர்ந்து பின் வேறு வழி இல்லாமல் சத்தியவானின் உயிரை அங்கேயே விட்டு சென்றார்.
சத்யவான் பிழைத்து எழுந்ததும் கடவுளுக்கும் யமதர்மனுக்கும் நன்றி சொல்லும் விதமாக உடனே தன் வீட்டில் இருந்த கார் அரிசியையும் வெள்ளமும், பருப்பையும் சேர்த்து அடை போல் செய்து உருகாத வெண்ணையும் வைத்து கடவுளுக்கு படைத்தாள். ஒரு மஞ்சள் கயிரையும் வைத்து பூஜை செய்து கணவன் கைகளால் அணிந்து கொண்டாள்
விதியை தன் மதியால் வென்ற சாவித்ரியியை நினைவு கூர்ந்து , தங்கள் கணவரையும் ஒரு நாளும் பிரியாதிருக்க வேண்டும் என்றும் நோன்பு நோற்று பிரார்த்திக்கும் பண்டிகையே இந்த காரடையான் நோன்பு.
சாவித்ரி செய்தது போலவே பச்சரிசியை வைத்து அடை செய்து மஞ்சள் நூல் வைத்து பூஜை செய்து அணிந்து கொள்வது வழக்கம்.
நோன்பு நோற்கும் முறை:
மாசி முடிந்து பங்குனி துவங்கும் நாளில் (இந்த வருடம் மார்ச் 14 ) அன்று அதிகாலையில் எழுந்து தலை குளித்து வீட்டை துடைத்து சுத்தம் செய்ய வேண்டும். அன்று முழுவதும் (பங்குனி பிறக்கும் நேரம் வரை) உபவாசம் இருக்க வேண்டும்.
வீட்டின் முன்பும் பூஜை அறையிலும் மாக்கோலம் இட வேண்டும்.
பின்பு அரிசியை ஊற வைத்து மாவு தயார் செய்து காராமணி பருப்பு சேர்த்து அடை (கொழுக்கட்டை) செய்து வைக்க வேண்டும்.
முன்பே தயார் செய்து வைத்த அல்லது கடைகளில் வாங்கிய அரிசி மாவிலும் செய்வதுண்டு. ஆனால் புதிதாக செய்த அரிசி மாவில் செய்வதே சிறப்பு.
பூஜை கு உரிய நேரத்தில் பூஜை அறையில் ஒரு நுனி வாழை இலையை போட்டு அதில் நுனி பகுதியில் உடைத்த தேங்காய், வெற்றிலை பாக்கு பழம் வைக்கவும். அதோடு வீட்டில் உள்ள பெண்களில் எண்ணிக்கையோடு ஒன்று கூடுதலாக( அம்மனுக்காக ) சேர்த்து மஞ்சள் நூல்களை தயார் செய்து நடுவில் ஒரு பூவை கோர்த்து வெற்றிலை மேல் வைக்கவும்.
மஞ்சள் பொடியை நீரில் கரைத்து நூல்களின் மேல் தடவினால் மஞ்சள் கயிறு தயார். வீட்டில் உள்ள பெண்கள் அனைவரும் பூஜையின் பின் இந்த கயிறை அணிந்து கொள்ள வேண்டும். திருமணம் ஆனவர்கள் கழுத்திலும், கன்னி பெண்கள் கைகளிலும் இந்த கயிறை அணிந்து கொள்ள வேண்டும்.
அதே இலையில் நடுவில் செய்து வைத்த கார் அடை மற்றும் உருகாத வெண்ணையும் வைக்க வேண்டும்.
பின்பு சூடம் , சாம்பிராணி தூபம் காட்டி நீர் விட்டு நெய்வேத்தியம் செய்து
பின்வரும் ஸ்லோகங்களை சொல்லி நமஸ்கரிக்கவும்.
உருகாகத வெண்ணையும் ஓரடையும் நோற்று உனக்கு நான் வைத்தேன் , ஒருநாளும் என் கணவர் என்னை பிரியாதிருக்க அருள் புரிவாய் தாயே !!!!
பின்பு ஒரு கயிறை அம்மன் படத்திற்க்கு மாட்டி விட்டு , மற்றவற்றை அணைத்து பெண்களும் அணிய வேண்டும். வயதான சுமங்கலி பெண்கள் இருந்தால் அவர்கள் கைகளால் அணிவித்து கொள்வது சிறப்பு.
மஞ்சள் கயிறை அணிவித்து கொள்ளும் பொழுது பின் வரும் மந்திரத்தை சொல்லியும் அணிந்து கொள்ளலாம்.
தோ³ரம்ʼ க்³ருʼஹ்ணாமி ஸுப⁴கே³ ஸஹாரித்³ரம் த⁴ராம்யஹம் |
ப⁴ர்து²: ஆயுஸ்² ஸித்³த்⁴யர்த²ம்ʼ ஸுப்ரீதா ப⁴வ ஸர்வதா³ ||
(5 நாட்கள் கழித்து இந்த கயிறை எடுத்து நீர் நிலைகளிலோ, செடியின் வேரிலோ போட்டு விடலாம். தாலி சரடிலும் சுற்றி கொள்ளலாம்.)
மாக்கோலம் இடும் முறை அறிய பின் வரும் லிங்க் ஐ சொடுக்கவும்.
இது நான் வழிபடும் முறை ஆகும். சிலர் கும்பம் வைத்தும் , அதை அம்பாளாக பாவித்து வழிப்படுத்தும் உண்டு.
இதில் ஏதேனும் விடு பட்டிருந்தால் பின்னூட்டத்தில் குறிப்பிடவும்.
நன்றி!!
நான்அறிந்த மற்றும் கற்றுக்கொண்டவற்றை பகிர்ந்து கொள்ள எடுத்துக்கொண்ட முயற்சியே இப்பக்கம்!!
Showing posts with label விழாக்கள். Show all posts
Showing posts with label விழாக்கள். Show all posts
Monday, 12 March 2018
Sunday, 24 July 2016
ஆடி மாதம் சிறப்புகள்-Specialties of Aadi month
தமிழ் மாதங்களில் வரும் நான்காம் மாதமே ஆடி.
இந்த ஆடி மாதத்தில் தான் ஆற்றில் புது நீர் பெருக்கெடுக்கும் காலம் ஆகையால் இந்த மாதத்தில் புதிதாக விதை விடுவார்கள்.
சூரிய பககாவனின் கதிர் நகர்வின் திசையை வைத்து ஆண்டினை இரண்டாக பிரிப்பர்.
- தட்சிணாயனம்
இது சூரியன் வட திசையில் இருந்து தென் திசை நோக்கி நகர்வது.
- உத்திராயணம்
இது சூரியன் தேன் திசையில் இருந்து வாடா திசை நோக்கி நகர்வது.
இந்த தட்சிணாயணம் ஆடிமாதத்தில் ஆரம்பித்து மார்கழி மாதம் வரையிலும், உத்திராயணம் தை மாதத்தில் தொடங்கி ஆனி மாதம் வரையிலும் நடக்கும்.
இந்த ஆடி மாதம் சக்தி மாதம் ஆகும். இந்த மாதத்தில் அம்மனை வழிபட ஏற்ற மாதம்.
இதற்கு அறிவியல் ரீதியான காரணத்தையும் எங்கோ படித்த நினைவு இருகின்றது.
இந்த ஆடி மாதம் கால மாற்றத்தின் துவக்கம் ஆகும். கோடை காலத்தில் இருந்து மழை காலம் துவங்கும் நேரம். இந்த திடீர் மாற்றத்தால் நோய்கள் தாக்க கூடிய வாய்புகள் மிக அதிகம்.
எனவே கிருமி நாசிநிகலான மஞ்சள் வேப்பிலை போன்றவற்றின் பயன்பாட்டினால் இந்த நோய்களின் தாக்கம் குறையும். எனவே தான் இந்த மாதத்தில்அ ம்மன் விழாக்களை அதிகமாக உருவாக்கி உள்ளனர் நம் முன்னோர்கள்.
இந்த ஆடி மாதத்தில் சிறப்பாக கருதப்படும் நாட்கள்.
- ஆடி வெள்ளி மற்றும் செவ்வாய்
இம்மாதத்தில் வரும் வெள்ளி செவ்வாய் கிழமைகள் மிக சிறப்பானதாக கருதப்படுகிறது.இந்நாளில் அம்மனை வழிபட்டால் மால்கைய பலம் கூடும் என்பது ஐதீகம். ஆடி மாத வெள்ளி கிழமைகளில் திருவிளக்கு பூஜை செய்வதும் மிக சிறப்பு.
ஆடி மாதம் வரும் பதினெட்டாம் நாளே ஆடிபெருக்கு நாளாகும். இப்படிகையை பற்றிய மேலும் விடயங்கள் கீழே உள்ள திரியில் உள்ளது.
ஆடி பதினெட்டு(அ)ஆடி பெருக்கு
ஆடி பதினெட்டு(அ)ஆடி பெருக்கு
- ஆடி அமாவாசை
ஆடி மாதம் வரும் அமாவாசை நாளில் கடலில் குளிப்பதும், பித்ருக்களுக்கு தர்ப்பணம் தருவதும் சிறப்பு.
- ஆடி பௌர்ணமி
இந்நாளிலேயே ஹயக்ரீவர் அவதாரம் செய்த நாளாக கூறுவார். எனவே அனைத்து பெருமாள் கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடக்கும்.
- ஆடி கிருத்திகை
ஆடி மாதத்தில் வரும் கிருத்திகை முருகபெருமானுக்கு மிக உகந்த நாளாக கொடாடபடுகிறது. எனவே அனைத்து முறைகள் கோவில்களிலும் சிறப்பு பூஜை அபிஷேகங்கள் நடைபெறும்.
இது பெண்கள் தங்கள் குடும்ப நலனுக்காக விநாயகரையும், அவ்வையாரையும் நினைத்து ஆடி மாத செவ்வாய் கிழமைகளில் செய்யும் ஒரு பூஜை ஆகும். இதை பற்றிய மேலும் விபரங்கள் கீழே உள்ள திரியில் உள்ளது.
- ஆடி பூரம்
ஆடிமாதத்தில் பூர நட்சத்திரத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் அவதரித்த திருநாளாகும்.
இந்த ஆடி மாதத்தில் தான் ஆற்றில் புது நீர் பெருக்கெடுக்கும் காலம் ஆகையால் இந்த மாதத்தில் புதிதாக விதை விடுவார்கள்.
ஆடி பெருக்கு(அ) ஆடி பதினெட்டு(Aadi perukku/Aadi pathinettu)
வருடத்தின் நான்காம் மாதமான ஆடி மாதத்தின் மிக முக்கியமான விழாக்களில் ஒன்று ஆடி பெருக்கு. ஆடி மாதத்தில் வரும் பதினெட்டாம் நாளையே ஆடி பெருக்காக கொண்டாடுகின்றோம்
ஆடி மாதத்தின் சிறப்புகளை இங்கு காணலாம்.
தமிழகத்தில் முக்கியமாக தஞ்சாவூர், திருவாரூர் , நாகப்பட்டினம் மாவட்டங்களுக்கு விவசாயத்திற்கு அடிப்படையான நீருக்கு ஆதாரம் காவிரி நதியே.
இந்த காவிரி நதிக்கு சிறப்பாக கொண்டாடப்படும் விழாவே இந்த ஆடி பதினெட்டு. நாகை மாவட்டம் பூம்புகாரிலிந்த காவிரி ஆறு கடலுடன் கலக்கிறது, இங்கே காவிரிக்கென்று தனி கோவிலும் உண்டு.
இந்த ஆடி மாதத்தில் தான் காவிரியின் பிறப்பிடமான குடகு மலை பகுதியில் பருவமழை பொழியும் நேரம், எனவே அந்த நீர்தமிழகத்தில் காவிரியின் புது நீராக பெருக்கெடுத்து ஓடும். விவசாயிகள் இந்த நீரைக் கொண்டே அந்த வருட சாகுபடிக்கான விதைகளை இடுவர்.
நமக்கு உணவு தரும் விவசாயத்திற்கு பயன்படும் அனைத்தையுமே தெய்வமாக வணங்கி விழா எடுத்து நன்றி தெரிவித்து சிறப்பு செய்வது நம் தமிழர்களின் பழக்கம். சூரியனுக்கு பொங்கல், உழவனுக்கு உறுதுணையாக நிற்கும் மாட்டிற்கு மாட்டு பொங்கல், போன்று நீரிற்கு இந்த பதினெட்டாம் பெருக்கு.
இந்த நாளில் தான் அந்த வருடத்தில் திருமணமான புதுமண தம்பதிகள் தங்கள் முஹுர்த்த மாலைகளை நீரில் விடுவது வழக்கம்.
இது நம் முன்னோர்களால் மிக சிறப்பாக கொண்டாட பட்ட விழாக்களில் ஒன்று. இதை கல்கியின் பொன்னியின் செல்வனின் முதல் அத்தியாயத்திலேயே காணலாம்.
சோழ நாட்டில் இவ்விழாவை மக்கள் கொண்டாடி மகிழ்ந்த காட்சிகளை நம் மனக்கண்களுக்கு படம் போன்று அழகாக விவரித்திருப்பார்.
பொன்னியின் செல்வனில் இருந்து சில வரிகள்:
"ஆடி பதினெட்டாம் பெருக்கன்று சோழ நாட்டு நதிகளிலெல்லாம் வெள்ளம் இரு கரையை தொட்டுக் கொண்டு ஓடுவது வழக்கம் அந்த நதிகளிலிருந்து தண்ணீர் பெரும் ஏரிகள் பூரணமாக நிரம்பி கரையின் உச்சியை தொட்டு கொண்டு அலைமோதி கொண்டிருப்பது வழக்கம். வடகாவேரி என்று பக்தர்களாலும் கொள்ளிடம் என்று பொதுமக்களாலும் வழங்கப்பட்ட நதியிலிருந்து வடவாற்றின் வழியாக தண்ணீர் வந்து வீர நாராயணன் ஏரியில் பாய்ந்து அதை ஒரு பொங்கு கடலாக மாற்றியிருந்தது.அந்த ஏரியின் எழுபத்தி ஏழு கணவாய் வழியாகவும் தண்ணீர் குபுகுபுவென்று பாய்ந்து பக்கத்தில் நேடுதூரதுக்கு நீர்வளத்தை அளித்துக்கொண்டு இருந்தது.
அந்த ஏரி தண்ணீரை கொண்டு கண்ணுக்கு எட்டிய தூரம் கழனிகளில் உழவும், விரை தெளியும் , நடவும் நடந்து கொண்டு இருந்தன. உழுது கொண்டிருந்த குடியானவர்களும் நடவு நட்டுகொண்டிருந்த குடியான பெண்களும் இனிய இசைகளில் அங்கங்கே பாடி கொண்டிருந்தார்கள்.
"வடவாறு பொங்கி வருகுது
வந்து பாருங்கள் பள்ளியரே!
வெள்ளாறு விரைந்து வருகுது
வேடிக்கை பாருங்கள் தோழியரே !!
காவேரி புரண்டு வருகிறது காண
வாருங்கள் பாங்கியரே !!! "
கொண்டாடபடும் முறை:
இதை காவிரி நதி அல்லது அதன் கிளை நதிகளுக்கோ அல்லது நீர் தேக்கங்களுக்கோ சென்று படைப்பது வழக்கம். எங்கள் ஊரில் இருந்து மணிகர்ணிகை என்ற கிளை நதி பக்கம் என்பதால் அங்கு சென்று படையல் செய்வோம்.
சிறுவர்கள் அழகாக வண்ண காகிதங்களால் அலங்கரிக்கப் பட்ட தேர் போன்ற அமைப்புடைய சப்பர தட்டியை இழுத்து வருவர்.
சிலர் நொனாக்காய் மற்றும் தென்னை ஓலை குச்சிகளை வைத்து செய்யப்பட்ட சிறிய தேரை இழுத்து வருவதும் உண்டு.
பெண்கள் வீட்டிலிருந்தே பல கலவை சாதங்களை(சக்கரை பொங்கல், புளிசாதம், தயிர்சாதம் போன்றவை) நெய்வேத்தியமாக கொண்டு வருவர்.
எள்ளு உருண்டை, மாவிளக்கு ஆகியவற்றையும் நெய்வேத்தியங்களாக படைப்பது வழக்கம்.
முதலில்ஆற்றின் கரை யோரத்தை சுத்தம் செய்து அங்கு நீர் தெளித்து அரிசி மாவால் கோலம் இட வேண்டும்.பின்பு ஆற்றின் அடியில் இருந்து மண் எடுத்து எத்தனை சுமங்கலிகள் உள்ளனரோ அத்தனை உருண்டைகளாய் பிடித்து வைத்து அதற்கு மஞ்சள் குங்கும போட்டு வைத்து பூக்களை வைக்க வேண்டும். இதையே காவிரி அம்மனாக நினைத்து அதற்க்கு காதோலை கருகமணி(ரோஜா வர்ணம் அடித்த பனை ஒலை சுருளில் சிறிய கருப்பு வளையல் கோர்க்க பாட்டிற்கும்), மஞ்சள் தடவிய நூல், போன்றவற்றை அணிவிக்க வேண்டும்.
பின்பு விளக்கை ஏற்றி வைத்து விட்டு அம்மனுக்கு முன்பு ஒரு தலை வாழை இலையில் வெற்றிலை பாக்கு , பழம்(பேரிக்காய் கட்டாயம் இருக்கும்), பூ, மஞ்சள் , குங்குமம், தேங்காய், போன்றவற்றை வைக்க வேண்டும்.பின்புறம் முகம் பார்க்கும் கண்ணாடியும் வைப்பர்.
(வீட்டிலேயே படைப்பவர்கள் மண்ணில் செய்வதற்கு பதில் மஞ்சளில் அம்மனை செய்து வழிபடலாம்.)
பின்பு வீட்டில் இருந்து தயார் செய்யப்பட்டு எடுத்து வந்த எள் உருண்டை , மாவிளக்கு,கலவை சாதங்கள் போன்றவற்றை வைக்க வேண்டும். இதோடு சிறிது பச்சரிசியுடன் பயத்தம் பருப்பு(பாசி பருப்பு) சேர்த்து ஆற்று நீரில் கழுவி அதில் வெல்லம் கலந்து நிவேதியமாக படைக்க வேண்டும்.
படைக்கும் முன்பு, சுமங்கலிகள் தங்கள் கழுத்தில் வேறு நகையை அணிந்து கொண்டு தங்கள் தாலியை காவிரி அம்மனுக்கு போட்டு படைத்த பின்பு அதை தங்கள் கணவன்மார்களின் கையினால் அணிந்து கொள்வார்கள்.
படைத்து முடித்ததும் அம்மன் மேல் இருந்த மஞ்சள் நூலினை எடுத்து ஆண்கள் கைகளிலும் ,பெண்கள் கழுத்திலும் அணிந்து கொளவார்கள்.
பின்பு அந்த அம்மனாக நினைத்து வழிபட்ட மண் உருண்டைளை ஆற்று நீரில் கரைத்து இந்த வருடமும் தங்களுக்கு உறுதுணையாக இருந்து விவசாயம் வளம் பெற உதாவுமாறு வேண்டிக்கொள்வார்கள்.
தற்போதைய நிலையில் ஆற்றில் தண்ணீர் வராததாலும், ஆற்றங்கரைக்கு சென்று படைக்கமுடியாததாலும் வீட்டிலேயே மோட்டாருக்கும் கிணற்றுக்கும் படைத்து விட்டாலும் உறவினர் நண்பர்களோடு குடும்பமாக சப்பரம் இழுத்து சென்று நுரை ததும்ப பெருக்கெடுத்து ஓடும் ஆற்றிற்கு படைத்து வந்த நினைவுகள் நிஜமாகவே ஒரு அழகிய கனா காலமாகவே மனதில் பதிந்து உள்ளது.
Friday, 1 July 2016
வேப்பம்பூ மாங்காய் பச்சடி(veppamboo mango pachadi)
இது தமிழ் வருட பிறப்பின் பொழுது செய்ய வேண்டிய முக்கிய நெய்வேத்தியம் ஆகும்.
இதில் அறுசுவைகளும் கலந்து இருக்கும்.
தேவையான பொருட்கள்:
மாங்காய்(துருவியது) 1 கப்
வேப்பம்பூ சிறிதளவு
வெல்லம் 1/4 கப்
தேங்காய் துருவல் 1/2 கப்
உப்பு தேவையான அளவு
கடுகு 1/4 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு 1/4 தேக்கரண்டி
பெருங்காயத்தூள் 1/4 தேக்கரண்டி
சிவப்பு மிளகாய் 1 அல்லது 2
எண்ணெய் தாளிக்க
கறிவேப்பிலை 1 கொத்து
செய்முறை :
முதலில் மாங்காயை தோல் நீக்கி பொடியாக செதுக்கி வைத்துக் கொள்ள வேண்டும். அதை ஒரு பாத்திரத்தில் நீர் விட்டு வேக வைக்கவும்.
நன்றாக வெந்ததும் கரண்டி அல்லது மத்தால் நன்றாக மசித்துக்கொள்ளவும்.
பின்பு உப்பு, பொடித்த வெல்லம் சேர்த்து ஒன்றாக சேர்ந்து வரும் அளவு கொதிக்க விடவும்.
பின்பு துருவிய தேங்காயை சேர்த்து கிளறி இறக்கவும்.
பின்பு சிறிது எண்ணையில் கடுகு, சிவப்பு மிளகாய், உளுத்தம்பருப்பு பெருங்காய தூள் , வேப்பம்பூ, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து பச்சடியில் சேர்த்து கலந்து பரிமாறவும்.
குறிப்பு: மாங்காய் வேக வைக்கும் பொழுது நீரை மாங்காய் மூழ்கும் அளவு சேர்த்தால் போதுமானது, அதிகம் சேர்த்தால் பச்சடி மிகவும் தளர்வாகிவிடும்.
வேப்பம்பூவை சிறிது நெய் அல்லது எண்ணெயில் தனியாக வதக்கியும் சேர்க்கலாம்.
இதில் அறுசுவைகளும் கலந்து இருக்கும்.
தேவையான பொருட்கள்:
மாங்காய்(துருவியது) 1 கப்
வேப்பம்பூ சிறிதளவு
வெல்லம் 1/4 கப்
தேங்காய் துருவல் 1/2 கப்
உப்பு தேவையான அளவு
கடுகு 1/4 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு 1/4 தேக்கரண்டி
பெருங்காயத்தூள் 1/4 தேக்கரண்டி
சிவப்பு மிளகாய் 1 அல்லது 2
எண்ணெய் தாளிக்க
கறிவேப்பிலை 1 கொத்து
செய்முறை :
முதலில் மாங்காயை தோல் நீக்கி பொடியாக செதுக்கி வைத்துக் கொள்ள வேண்டும். அதை ஒரு பாத்திரத்தில் நீர் விட்டு வேக வைக்கவும்.
நன்றாக வெந்ததும் கரண்டி அல்லது மத்தால் நன்றாக மசித்துக்கொள்ளவும்.
பின்பு உப்பு, பொடித்த வெல்லம் சேர்த்து ஒன்றாக சேர்ந்து வரும் அளவு கொதிக்க விடவும்.
பின்பு துருவிய தேங்காயை சேர்த்து கிளறி இறக்கவும்.
பின்பு சிறிது எண்ணையில் கடுகு, சிவப்பு மிளகாய், உளுத்தம்பருப்பு பெருங்காய தூள் , வேப்பம்பூ, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து பச்சடியில் சேர்த்து கலந்து பரிமாறவும்.
குறிப்பு: மாங்காய் வேக வைக்கும் பொழுது நீரை மாங்காய் மூழ்கும் அளவு சேர்த்தால் போதுமானது, அதிகம் சேர்த்தால் பச்சடி மிகவும் தளர்வாகிவிடும்.
வேப்பம்பூவை சிறிது நெய் அல்லது எண்ணெயில் தனியாக வதக்கியும் சேர்க்கலாம்.
Tuesday, 26 April 2016
தமிழ் வருட பிறப்பு
இது புது வருடத்தின் முதல் பண்டிகையாக தமிழர்களால் கொண்டாடபடுகிறது. தமிழ் மாதங்கள் சூரியனின் சுழற்சியின் அடிப்படையில் வரையருக்க பட்ட ஒன்று ஆகும்.
இந்த சித்திரை முதல் தேதியில் கடவுளுக்கு சிறப்பு பூஜைகள் செய்து வரும் புது வருடம் சிறப்பாக இருக்க அருள் புரியுமாறு வேண்டிக்கொள்வர்.
முதல் நாளே வீட்டை சுத்தபடுத்தி ஈர மாகோலம் இட வேண்டும். விளக்கு முதலிய பூஜை பொருட்களை சுத்தபடுத்தி தயார் செய்து வைத்து விட வேண்டும். புத்தாண்டு அன்று அதிகாலையில் எழுந்து பூஜை கு ஏற்ற நல்ல நேரத்தில் கடவுளுக்கு படைக்க வேண்டும்.
பொதுவாக புத்தாண்டு க்கு அறுசுவையும் கலந்து இருக்கும் விதமாக வடை பாயசம் செய்வதோடு வேப்பம்பூ மாங்காய் பச்சடியும், வடபருப்பும் செய்து இறைவனுக்கு படைப்பது வழக்கம். வேம்பம்பூ ரசமும் செய்யலாம்.
அதோடு நீர் மோர், பானகம் போன்றவையும் செய்வார்கள்.
புத்தாண்டு அன்று ஒவ்வொரு வீட்டில் அந்த வருடத்தின் புது பஞ்சாங்கத்தையும் வைத்து படைத்து வீட்டில் உள்ள பெரியவர்கள் அதை படிப்பார்கள். புத்தாண்டு கு முன்பே பஞ்சாங்கம் வாங்கி இருந்தாலும் அதை படிக்காமல் பிரிக்க கூடாது என்று என் அம்மா சொல்லுவார்கள்.
அன்றைய தினம் மாலை வேளை யில் உள்ளூர் கோவில்களில் ப்ரோகிதர் போன்றோர் பஞ்சாங்கம் படித்து பலன் கூறுவார்கள். பிறக்கும் வருடம் எத்தகைய வருடமாக அமையும் என்றும, எந்தந்த ராசிக்கு சிறப்பாக அமையும், பரிகாரம் செய்ய வெடிய ராசிகள் போன்ற விஷயங்களையும் மழை வெப்பம் போன்ற பொதுவான விஷயங்களையும் கூறுவார்கள்.
எங்கள் கிராமத்தில் விவசாயமே முக்கிய தொழில் என்பதால் அன்றைய தினம் முழுவதும் அந்த வருடத்திய பலன்களை வைத்து விவசாயம் எப்படி இருக்கும் என்று பெரியவர்கள் பேசிக்கொள்வது இன்றும் என் நினைவில் உள்ளது.
தமிழர் பண்டிகைகள்
நம் தமிழர் வாழ்வில் பண்டிகைகளுக்கு குறைவே இல்லை. ஒவ்வொரு பண்டிகைக்கும் ஒவ்வொரு கொண்டாடும் முறைகள் உண்டு, ஆனால் இன்று பலருக்கும் அந்த முறைகள் தெரிவதில்லை.
இன்றைய சூழலில் என் அம்மா அறிந்தவற்றுள் பாதி அளவு கூட எனக்கு தெரிவதில்லை, எனவே என் அடுத்த தலைமுறைக்கு என்னில் பாதியாவது கொண்டு செல்லும் முயற்சியாகவே இந்த பதிவு.
இதில் எனக்கு தெரிந்த, எங்கள் குடும்பங்களில் உள்ள முறைகளையும் அந்தந்த பண்டிகைகளின் சிறப்புகள் போன்றவற்றை முடிந்த அளவு விளக்கமாக கொடுத்துள்ளேன்.
2. சித்ரா பௌர்ணமி
Sunday, 20 April 2014
மறக்கப்பட்ட தமிழ் பண்பாடுகள்
இக்கட்டுரை penmai.com நடத்திய தமிழ் புத்தாண்டு சிறப்பு போட்டிக்காக நான் எழுதி பரிசு பெற்ற பதிவாகும்.
இன்றைய சூழ்நிலையில் நாம் பல பாரம்பரிய விஷயங்களை மறந்து அவசர கதியில் ஓடிகொண்டிருக்கிறோம்.
முதலில் குழந்தை வளர்ப்பை எடுத்துக்கொள்வோம். இன்றைய நாகரிக உலகில் நம்மமுடைய சிறப்பான தாலாட்டு பாடல்களை மறந்து விட்டோம். தொலைகாட்சியில் சினிமா பாடல்களை போட்டு குழந்தையை கேட்க செய்துவிட்டு நம்முடைய வேலைகளை கவனிக்கிறோம் . முன்பெல்லாம் தாலாட்டு பாடல்களிலேயே குழந்தைக்கு, அம்மா, அப்பா, தாத்தா, பாட்டி, மாமா ,மாமி போன்ற உறவு முறைகளை சொல்லி கொடுப்பார்கள், தமிழ் எழுத்துக்களை சொல்லி கொடுப்பார்கள், நம் வாழ்க்கை முறை மற்றும் சுற்றி உள்ள விஷயங்கள் அனைத்தையும் குழந்தைகளை கேட்க செய்வார்கள்.
இன்று அந்த தாலாட்டு பாடல்களை கேட்கமுடிவதில்லை
அடுத்ததாக விழாக்கள் கொண்டாடும் முறைகளை நாம் வெகுவாக மறந்துவிட்டோம். இன்று நகரத்தில் உள்ள பலர் கடமைக்கு விழாக்களை கொண்டாடுகிறார்கள்.கிராமங்களிலும் இப்போது கொஞ்சம் கொஞ்சம் ஆக விழாக்களை மறந்து வருகிறார்கள். நம் முன்னோர்கள் கொண்டாடிய ஒவ்வொரு விழாக்களும் வழிபடும் முறையில் தனி தன்மை வாய்ந்ததாக இருக்கும் .
எடுத்துகாட்டாக சித்திரை மாத பௌர்ணமி(சித்ராபௌர்னமி) விழாவை எடுத்துக்கொள்வோம், சூரியனுக்கு நேராக (வீட்டு முற்றத்தில்) 12 கட்டங்கள் வருமாறு மாவு கோலம் இட்டு அக்கோலத்தில் தேர், விசிறி, ஏடு, எழுத்தாணி , காலடிகள் போன்ற வடிவங்கள் போடுவார்கள்.முறத்தில் ஒன்பது கட்டங்கள் இட்டு அதில் வீட்டில் விளையும் பொருட்கள் ஒன்பதை வைத்து சர்க்கரை பொங்கல், வெப்பன்பூ பச்சடி செய்து வழி படுவார்கள். இந்நாள் அன்று சித்திர குப்தர் நம் வீட்டுக்கு வந்து செல்வதாக ஐதீகம்.
இன்று இந்த பழக்கம் எத்தனை பேருக்கு தெரியும்??? எத்தனை பேர் செய்கிறார்கள் ???
காவேரி பாயும் இடங்களில் ஆடிபெருக்கு விழாவின் பொழுது முன்பெல்லாம் சிறுவர்கள் சப்பர தட்டி இழுத்து கொண்டு வர பெரியவர்கள் குழுவாக காவிரி நதிக்கும் அதன் கிளை நதிகளுக்கும் சென்று படைப்பார்கள்.இப்பொழுதெல்லாம் காவிரியில் நீரே வருவதில்லை. இப்போது கிராமங்களில் கூட இந்த பாரம்பரிய படையல் செய்வது வெகுவாக குறைத்துவிட்டது.வீட்டில் உள்ள மோட்டாருக்கு ஒரு இனிப்பு மட்டும் வைத்து படைத்தது ஆடி பெருக்கை முடித்து விடுகிறார்கள்.
நம் விழாக்கள் அனைத்தும் விவசாயத்தையும் , நாம் செய்யும் தொழிலையும் சார்ந்து அதற்க்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவே இருக்கும்.
இது போன்ற பல விழாக்கள் இன்று மெதுவாக மறைந்து(விட்டன) வருகின்றன.
இன்று நம்முடைய பல பாரம்பரிய விளையாட்டுகள் நம் அடுத்த தலைமுறைக்கு சொல்லாமலேயே விட்டு விடுகின்றோம் .
இன்று கிராமங்களில் கூட கிரிக்கெட் புகுந்து நம் கபடியியை ஒதுக்கி விட்டது. கபடி விளையாட்டில் விளையாட்டோடு மூச்சு பயிற்சியையும் செய்யகூடிய முறையை கண்டறிந்த நம் முன்னோர்களை நினைத்து வியக்காமல் இருக்க முடியவில்லை.
நொண்டி, தாயம் ,பரமபதம், நூறு குச்சி,ஊது காய், ஆடு புலி(பதினைந்தான் புலி),கோலி,புதை குச்சி, பொதக்காய்(தட்டாங்கல் என்றும் கூறுவார்கள்)), பல்லாங்குழி, கிட்டி புல்,குலை குலையாய் முந்திரிக்காய், நொண்டி, ஒத்தையா இரட்டையா போன்ற விளையாட்டுகளில் பாதி விளையாட்டுகளின் பெயர்கள் கூட இந்த தலைமுறையினருக்கு தெரியாமலேயே உள்ளன.
இன்றைய சூழ்நிலையில் நாம் சிறுவயதில் விளையாடிய கல்ட்டா பெல்ட்டு (இதன் பண்டைய பெயர் எனக்கும் தெரியவில்லை) விளையாட்டை இந்த காலகட்டத்தில் விளையாட இயலாது, குறைந்த பட்சம் நம் குழந்தைகள் ஆங்க்ரி பேர்ட்ஸ் (Angry Birds) விளையாடும் பொழுது இதன் மூலமான நம் பாரம்பரிய விளையாட்டையும் சொல்லி வளர்க்கலாம்.
சிறு வயதில் மோர் கிடையும் விளையாட்டு என்று குழந்தைகளுக்கு சொல்லி கொடுப்பார்கள். நம் உறவு முறைகள், உணவு வகைகள் ஆகியவற்றை மறைமுகமாக விளையாட்டாக சொல்லி கொடுக்கும் முறை, இன்று இது மறைந்து(விட்ட) வரும் விளையாட்டுகளில் ஒன்றாகி விட்டது.
நாம் விளையாடிய ஓடி பிடித்து ஒளிந்து ஆடுதல், கல்லா மண்ணா போன்ற விளைய்ட்டுகள் கார் ரேஸ்(Car race),பபுள் ப்ளாஸ்ட்(Bubble blast) ,டெம்பல் ரன்(Temple run) போன்ற கம்புயட்டர் விளையாட்டுகளால் மறக்கடிக்க படுகின்றன.
இதை சொன்னால் காலத்துக்கு ஏற்ப மாறவேண்டும் என்கிறார்கள்.இப்படி காலத்துக்கு ஏற்ப மாறித்தான் சிறு வயது குற்றங்கள் அதிகரித்து உள்ளன.
இது ஒரு பக்கம் இருக்க நம் உயரிய பாரம்பரியமாக கருதப்படும் விருந்தோம்பலும் இன்றைய சூழலில் மேற்கத்திய கலாச்சாரத்தில் மாறி வருகின்றன.
விருந்தினர் வந்ததும் அவர்களிடம் நலம் விசாரித்து விருதோம்பல் செய்வது வழக்கம் ,இன்றைய தலைமுறையில் விருந்தினர் வந்தால் ஒரு ஹலோ சொல்லிவிட்டு டீவீ சீரியலில் அல்லது நடன நிகழ்ச்சியில் மூழ்கிவிடுகிறோம். இதனால் உறவுகளிடம் அன்யோன்யம் குறைந்து விடுகிறது
விருந்து உபசரிக்கும் முறையும் இப்போது வெகுவாக மாறி விட்டது. 2 அல்லது 3 பேர் வந்தால் அனைவருக்கும் சேர்த்து ஒரே தட்டில் தின்பண்டம் வைக்கும் முறை இப்போது பரவலாக காண படுகிறது.
இது நம் தமிழ் பாரம்பரிய முறைக்கு நேர் மாறான ஒன்றாகவே நான் கருதுகின்றேன்.
விருந்து என்றாலே தலை வாழை இலையில்லாமல் இருக்காது.
இதில் குறிப்பிடபட வேண்டிய விஷயம் அந்த இலை போடும் முறையில் இருந்து, பதார்த்தங்களை வைக்கும் முறை, உணவு உண்ணும் முறை, உணவு இடும் ஒழுங்கு ஆகிய அனைத்திற்கும் ஒரு முறையை நம் பண்டை தமிழர் வகுத்துள்ளனர். அது இன்றைய நவ நாகரிக உலகில் பின்பற்ற படுவதில்லை. இன்றைய நிலையில் இலையில் சாப்பிடுவதென்பதே அரிதான ஒன்றாகி விட்டது.
அதேபோல் நாம் பல உணவுகளை கூட மறந்து விட்டோம் புளி கூழ் ,கம்ப கூழ் , சோளமாவு தோசை , மொடக்கத்தான் தோசை ,கேழ்வரகு அடை இன்னும் பல உணவுகளை நாம் மறந்து விட்டோம் . இதில் கொடுமை என்னவென்றால் இந்த உணவுகள் எல்லாம் இப்போது சர்க்கரை நோயாளிகள் மட்டும் பயன்படுத்தும் உணவு என்று விளம்பரங்கள் மூலம் பரப்புரை செய்யபடுகிறது.
நம் வீடுகளில் உள்ள சிறு உயிர்களுக்கும் உணவு அளிக்க வேண்டும் என்பதை கருதியே நம் முன்னோர்கள் அரிசி மாவில் கோலம் இடுவார்கள். ஆனால் இப்பொழுது நாம் அதை அழகு என்ற ஒற்றை பார்வையிலேயே பார்த்து , கல் மாவு உபயோகித்து அந்த கோலத்தின் பயன்பாட்டையே மாற்றிவிட்டோம்.
இறுதியாக உடை விஷயத்துக்கு வருவோம். நம் பாட்டிகள் எல்லாம் பின் கொசுவம் வைத்து சேலை அணிவார்கள். இன்று இம்முறை வழக்கில் இல்லை.(வெகு சில இடங்கள் தவிர). இப்போது திரைப்படங்களில் குழு நடனத்தில் மட்டுமே பார்க்க முடிகிறது.
அதே போல் ஆண்கள் அணியும் கல்லு ஜிப்பா என்று ஒன்று உண்டு, என் தாத்தா அணிந்து கண்டிருக்கிறேன். அதுவும் இப்பொழுது பழக்கத்தில் இல்லை. மேலும் பட்டு பாவாடை, தாவணி ,ஏன் சேலை அணியும் பழக்கம் கூட குறைந்திது கொண்டே வருகிறது என்பது வருத்தத்திற்கு உரியது.
கலாச்சாரம், பண்பாடு போன்றவை ஒவ்வொரு நாட்டின் அடையாளமாக கருத படுகின்றது. இவ்வாறான நம் சொந்த அடையாளங்களை விடுத்து மேற்கத்தைய பாணியை நோக்கி நாம் விரைந்து கொண்டிருக்கிறோம் என்பது மறுக்க முடியாத உண்மையாக உள்ளது.எனவே நாம் நம் அடையாளங்களில் இருந்து முடிந்த அளவு பிறழாமல் தமிழ் பெருமையை உலகுக்கு எடுத்து கூற முயற்சிக்கலாமே!!
Subscribe to:
Posts (Atom)