இக்கட்டுரை penmai.com நடத்திய தமிழ் புத்தாண்டு சிறப்பு போட்டிக்காக நான் எழுதி பரிசு பெற்ற பதிவாகும்.
இன்றைய சூழ்நிலையில் நாம் பல பாரம்பரிய விஷயங்களை மறந்து அவசர கதியில் ஓடிகொண்டிருக்கிறோம்.
முதலில் குழந்தை வளர்ப்பை எடுத்துக்கொள்வோம். இன்றைய நாகரிக உலகில் நம்மமுடைய சிறப்பான தாலாட்டு பாடல்களை மறந்து விட்டோம். தொலைகாட்சியில் சினிமா பாடல்களை போட்டு குழந்தையை கேட்க செய்துவிட்டு நம்முடைய வேலைகளை கவனிக்கிறோம் . முன்பெல்லாம் தாலாட்டு பாடல்களிலேயே குழந்தைக்கு, அம்மா, அப்பா, தாத்தா, பாட்டி, மாமா ,மாமி போன்ற உறவு முறைகளை சொல்லி கொடுப்பார்கள், தமிழ் எழுத்துக்களை சொல்லி கொடுப்பார்கள், நம் வாழ்க்கை முறை மற்றும் சுற்றி உள்ள விஷயங்கள் அனைத்தையும் குழந்தைகளை கேட்க செய்வார்கள்.
இன்று அந்த தாலாட்டு பாடல்களை கேட்கமுடிவதில்லை
அடுத்ததாக விழாக்கள் கொண்டாடும் முறைகளை நாம் வெகுவாக மறந்துவிட்டோம். இன்று நகரத்தில் உள்ள பலர் கடமைக்கு விழாக்களை கொண்டாடுகிறார்கள்.கிராமங்களிலும் இப்போது கொஞ்சம் கொஞ்சம் ஆக விழாக்களை மறந்து வருகிறார்கள். நம் முன்னோர்கள் கொண்டாடிய ஒவ்வொரு விழாக்களும் வழிபடும் முறையில் தனி தன்மை வாய்ந்ததாக இருக்கும் .
எடுத்துகாட்டாக சித்திரை மாத பௌர்ணமி(சித்ராபௌர்னமி) விழாவை எடுத்துக்கொள்வோம், சூரியனுக்கு நேராக (வீட்டு முற்றத்தில்) 12 கட்டங்கள் வருமாறு மாவு கோலம் இட்டு அக்கோலத்தில் தேர், விசிறி, ஏடு, எழுத்தாணி , காலடிகள் போன்ற வடிவங்கள் போடுவார்கள்.முறத்தில் ஒன்பது கட்டங்கள் இட்டு அதில் வீட்டில் விளையும் பொருட்கள் ஒன்பதை வைத்து சர்க்கரை பொங்கல், வெப்பன்பூ பச்சடி செய்து வழி படுவார்கள். இந்நாள் அன்று சித்திர குப்தர் நம் வீட்டுக்கு வந்து செல்வதாக ஐதீகம்.
இன்று இந்த பழக்கம் எத்தனை பேருக்கு தெரியும்??? எத்தனை பேர் செய்கிறார்கள் ???
காவேரி பாயும் இடங்களில் ஆடிபெருக்கு விழாவின் பொழுது முன்பெல்லாம் சிறுவர்கள் சப்பர தட்டி இழுத்து கொண்டு வர பெரியவர்கள் குழுவாக காவிரி நதிக்கும் அதன் கிளை நதிகளுக்கும் சென்று படைப்பார்கள்.இப்பொழுதெல்லாம் காவிரியில் நீரே வருவதில்லை. இப்போது கிராமங்களில் கூட இந்த பாரம்பரிய படையல் செய்வது வெகுவாக குறைத்துவிட்டது.வீட்டில் உள்ள மோட்டாருக்கு ஒரு இனிப்பு மட்டும் வைத்து படைத்தது ஆடி பெருக்கை முடித்து விடுகிறார்கள்.
நம் விழாக்கள் அனைத்தும் விவசாயத்தையும் , நாம் செய்யும் தொழிலையும் சார்ந்து அதற்க்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவே இருக்கும்.
இது போன்ற பல விழாக்கள் இன்று மெதுவாக மறைந்து(விட்டன) வருகின்றன.
இன்று நம்முடைய பல பாரம்பரிய விளையாட்டுகள் நம் அடுத்த தலைமுறைக்கு சொல்லாமலேயே விட்டு விடுகின்றோம் .
இன்று கிராமங்களில் கூட கிரிக்கெட் புகுந்து நம் கபடியியை ஒதுக்கி விட்டது. கபடி விளையாட்டில் விளையாட்டோடு மூச்சு பயிற்சியையும் செய்யகூடிய முறையை கண்டறிந்த நம் முன்னோர்களை நினைத்து வியக்காமல் இருக்க முடியவில்லை.
நொண்டி, தாயம் ,பரமபதம், நூறு குச்சி,ஊது காய், ஆடு புலி(பதினைந்தான் புலி),கோலி,புதை குச்சி, பொதக்காய்(தட்டாங்கல் என்றும் கூறுவார்கள்)), பல்லாங்குழி, கிட்டி புல்,குலை குலையாய் முந்திரிக்காய், நொண்டி, ஒத்தையா இரட்டையா போன்ற விளையாட்டுகளில் பாதி விளையாட்டுகளின் பெயர்கள் கூட இந்த தலைமுறையினருக்கு தெரியாமலேயே உள்ளன.
இன்றைய சூழ்நிலையில் நாம் சிறுவயதில் விளையாடிய கல்ட்டா பெல்ட்டு (இதன் பண்டைய பெயர் எனக்கும் தெரியவில்லை) விளையாட்டை இந்த காலகட்டத்தில் விளையாட இயலாது, குறைந்த பட்சம் நம் குழந்தைகள் ஆங்க்ரி பேர்ட்ஸ் (Angry Birds) விளையாடும் பொழுது இதன் மூலமான நம் பாரம்பரிய விளையாட்டையும் சொல்லி வளர்க்கலாம்.
சிறு வயதில் மோர் கிடையும் விளையாட்டு என்று குழந்தைகளுக்கு சொல்லி கொடுப்பார்கள். நம் உறவு முறைகள், உணவு வகைகள் ஆகியவற்றை மறைமுகமாக விளையாட்டாக சொல்லி கொடுக்கும் முறை, இன்று இது மறைந்து(விட்ட) வரும் விளையாட்டுகளில் ஒன்றாகி விட்டது.
நாம் விளையாடிய ஓடி பிடித்து ஒளிந்து ஆடுதல், கல்லா மண்ணா போன்ற விளைய்ட்டுகள் கார் ரேஸ்(Car race),பபுள் ப்ளாஸ்ட்(Bubble blast) ,டெம்பல் ரன்(Temple run) போன்ற கம்புயட்டர் விளையாட்டுகளால் மறக்கடிக்க படுகின்றன.
இதை சொன்னால் காலத்துக்கு ஏற்ப மாறவேண்டும் என்கிறார்கள்.இப்படி காலத்துக்கு ஏற்ப மாறித்தான் சிறு வயது குற்றங்கள் அதிகரித்து உள்ளன.
இது ஒரு பக்கம் இருக்க நம் உயரிய பாரம்பரியமாக கருதப்படும் விருந்தோம்பலும் இன்றைய சூழலில் மேற்கத்திய கலாச்சாரத்தில் மாறி வருகின்றன.
விருந்தினர் வந்ததும் அவர்களிடம் நலம் விசாரித்து விருதோம்பல் செய்வது வழக்கம் ,இன்றைய தலைமுறையில் விருந்தினர் வந்தால் ஒரு ஹலோ சொல்லிவிட்டு டீவீ சீரியலில் அல்லது நடன நிகழ்ச்சியில் மூழ்கிவிடுகிறோம். இதனால் உறவுகளிடம் அன்யோன்யம் குறைந்து விடுகிறது
விருந்து உபசரிக்கும் முறையும் இப்போது வெகுவாக மாறி விட்டது. 2 அல்லது 3 பேர் வந்தால் அனைவருக்கும் சேர்த்து ஒரே தட்டில் தின்பண்டம் வைக்கும் முறை இப்போது பரவலாக காண படுகிறது.
இது நம் தமிழ் பாரம்பரிய முறைக்கு நேர் மாறான ஒன்றாகவே நான் கருதுகின்றேன்.
விருந்து என்றாலே தலை வாழை இலையில்லாமல் இருக்காது.
இதில் குறிப்பிடபட வேண்டிய விஷயம் அந்த இலை போடும் முறையில் இருந்து, பதார்த்தங்களை வைக்கும் முறை, உணவு உண்ணும் முறை, உணவு இடும் ஒழுங்கு ஆகிய அனைத்திற்கும் ஒரு முறையை நம் பண்டை தமிழர் வகுத்துள்ளனர். அது இன்றைய நவ நாகரிக உலகில் பின்பற்ற படுவதில்லை. இன்றைய நிலையில் இலையில் சாப்பிடுவதென்பதே அரிதான ஒன்றாகி விட்டது.
அதேபோல் நாம் பல உணவுகளை கூட மறந்து விட்டோம் புளி கூழ் ,கம்ப கூழ் , சோளமாவு தோசை , மொடக்கத்தான் தோசை ,கேழ்வரகு அடை இன்னும் பல உணவுகளை நாம் மறந்து விட்டோம் . இதில் கொடுமை என்னவென்றால் இந்த உணவுகள் எல்லாம் இப்போது சர்க்கரை நோயாளிகள் மட்டும் பயன்படுத்தும் உணவு என்று விளம்பரங்கள் மூலம் பரப்புரை செய்யபடுகிறது.
நம் வீடுகளில் உள்ள சிறு உயிர்களுக்கும் உணவு அளிக்க வேண்டும் என்பதை கருதியே நம் முன்னோர்கள் அரிசி மாவில் கோலம் இடுவார்கள். ஆனால் இப்பொழுது நாம் அதை அழகு என்ற ஒற்றை பார்வையிலேயே பார்த்து , கல் மாவு உபயோகித்து அந்த கோலத்தின் பயன்பாட்டையே மாற்றிவிட்டோம்.
இறுதியாக உடை விஷயத்துக்கு வருவோம். நம் பாட்டிகள் எல்லாம் பின் கொசுவம் வைத்து சேலை அணிவார்கள். இன்று இம்முறை வழக்கில் இல்லை.(வெகு சில இடங்கள் தவிர). இப்போது திரைப்படங்களில் குழு நடனத்தில் மட்டுமே பார்க்க முடிகிறது.
அதே போல் ஆண்கள் அணியும் கல்லு ஜிப்பா என்று ஒன்று உண்டு, என் தாத்தா அணிந்து கண்டிருக்கிறேன். அதுவும் இப்பொழுது பழக்கத்தில் இல்லை. மேலும் பட்டு பாவாடை, தாவணி ,ஏன் சேலை அணியும் பழக்கம் கூட குறைந்திது கொண்டே வருகிறது என்பது வருத்தத்திற்கு உரியது.
கலாச்சாரம், பண்பாடு போன்றவை ஒவ்வொரு நாட்டின் அடையாளமாக கருத படுகின்றது. இவ்வாறான நம் சொந்த அடையாளங்களை விடுத்து மேற்கத்தைய பாணியை நோக்கி நாம் விரைந்து கொண்டிருக்கிறோம் என்பது மறுக்க முடியாத உண்மையாக உள்ளது.எனவே நாம் நம் அடையாளங்களில் இருந்து முடிந்த அளவு பிறழாமல் தமிழ் பெருமையை உலகுக்கு எடுத்து கூற முயற்சிக்கலாமே!!
No comments:
Post a Comment