Sunday, 24 July 2016

ஆடி மாதம் சிறப்புகள்-Specialties of Aadi month

தமிழ் மாதங்களில் வரும் நான்காம் மாதமே ஆடி.
சூரிய பககாவனின் கதிர் நகர்வின் திசையை வைத்து ஆண்டினை  இரண்டாக பிரிப்பர். 
  • தட்சிணாயனம்  
இது சூரியன் வட திசையில் இருந்து தென்  திசை நோக்கி நகர்வது.
  • உத்திராயணம்
இது சூரியன் தேன் திசையில் இருந்து வாடா திசை நோக்கி நகர்வது.

இந்த தட்சிணாயணம் ஆடிமாதத்தில் ஆரம்பித்து மார்கழி மாதம் வரையிலும், உத்திராயணம் தை மாதத்தில் தொடங்கி ஆனி மாதம் வரையிலும் நடக்கும்.

இந்த ஆடி மாதம் சக்தி மாதம் ஆகும். இந்த மாதத்தில் அம்மனை வழிபட   ஏற்ற மாதம்.
இதற்கு  அறிவியல் ரீதியான காரணத்தையும் எங்கோ படித்த நினைவு இருகின்றது.
இந்த ஆடி மாதம் கால மாற்றத்தின் துவக்கம் ஆகும். கோடை காலத்தில் இருந்து மழை காலம் துவங்கும் நேரம். இந்த திடீர் மாற்றத்தால்  நோய்கள் தாக்க கூடிய வாய்புகள் மிக அதிகம்.
எனவே கிருமி நாசிநிகலான மஞ்சள் வேப்பிலை போன்றவற்றின் பயன்பாட்டினால் இந்த நோய்களின் தாக்கம்  குறையும். எனவே தான் இந்த மாதத்தில்அ ம்மன் விழாக்களை அதிகமாக உருவாக்கி உள்ளனர் நம் முன்னோர்கள்.
இந்த ஆடி மாதத்தில் சிறப்பாக கருதப்படும் நாட்கள்.

  • ஆடி வெள்ளி மற்றும் செவ்வாய்
இம்மாதத்தில் வரும் வெள்ளி செவ்வாய் கிழமைகள் மிக சிறப்பானதாக கருதப்படுகிறது.இந்நாளில் அம்மனை வழிபட்டால் மால்கைய பலம் கூடும் என்பது ஐதீகம். ஆடி மாத வெள்ளி கிழமைகளில் திருவிளக்கு பூஜை செய்வதும் மிக சிறப்பு.
ஆடி மாதம் வரும் பதினெட்டாம் நாளே  ஆடிபெருக்கு நாளாகும். இப்படிகையை பற்றிய மேலும் விடயங்கள்  கீழே உள்ள திரியில் உள்ளது.
           ஆடி பதினெட்டு(அ)ஆடி பெருக்கு 
  • ஆடி அமாவாசை
ஆடி மாதம் வரும் அமாவாசை நாளில் கடலில் குளிப்பதும்,  பித்ருக்களுக்கு தர்ப்பணம் தருவதும்  சிறப்பு.
  • ஆடி பௌர்ணமி
இந்நாளிலேயே ஹயக்ரீவர் அவதாரம் செய்த நாளாக கூறுவார். எனவே அனைத்து பெருமாள் கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடக்கும்.
  • ஆடி கிருத்திகை
ஆடி மாதத்தில் வரும் கிருத்திகை  முருகபெருமானுக்கு மிக உகந்த நாளாக கொடாடபடுகிறது. எனவே அனைத்து முறைகள் கோவில்களிலும் சிறப்பு பூஜை அபிஷேகங்கள் நடைபெறும்.
இது பெண்கள் தங்கள் குடும்ப நலனுக்காக விநாயகரையும், அவ்வையாரையும் நினைத்து ஆடி மாத  செவ்வாய் கிழமைகளில்  செய்யும் ஒரு பூஜை ஆகும். இதை பற்றிய மேலும் விபரங்கள் கீழே உள்ள திரியில் உள்ளது.
  • ஆடி பூரம்
ஆடிமாதத்தில் பூர நட்சத்திரத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் அவதரித்த திருநாளாகும்.

இந்த ஆடி மாதத்தில் தான் ஆற்றில் புது நீர் பெருக்கெடுக்கும் காலம் ஆகையால் இந்த மாதத்தில் புதிதாக விதை விடுவார்கள்.

ஆடி பெருக்கு(அ) ஆடி பதினெட்டு(Aadi perukku/Aadi pathinettu)


வருடத்தின் நான்காம் மாதமான ஆடி மாதத்தின் மிக முக்கியமான விழாக்களில் ஒன்று ஆடி பெருக்கு. ஆடி மாதத்தில் வரும் பதினெட்டாம் நாளையே ஆடி பெருக்காக கொண்டாடுகின்றோம்
ஆடி மாதத்தின்  சிறப்புகளை இங்கு காணலாம்.


தமிழகத்தில்  முக்கியமாக தஞ்சாவூர், திருவாரூர் , நாகப்பட்டினம் மாவட்டங்களுக்கு விவசாயத்திற்கு அடிப்படையான   நீருக்கு  ஆதாரம் காவிரி நதியே.
இந்த காவிரி நதிக்கு சிறப்பாக கொண்டாடப்படும் விழாவே இந்த ஆடி பதினெட்டு. நாகை மாவட்டம் பூம்புகாரிலிந்த காவிரி ஆறு கடலுடன் கலக்கிறது, இங்கே காவிரிக்கென்று தனி கோவிலும் உண்டு.

இந்த ஆடி மாதத்தில் தான் காவிரியின் பிறப்பிடமான குடகு மலை பகுதியில் பருவமழை பொழியும் நேரம், எனவே அந்த நீர்தமிழகத்தில்  காவிரியின்  புது நீராக  பெருக்கெடுத்து ஓடும். விவசாயிகள் இந்த நீரைக்  கொண்டே அந்த வருட சாகுபடிக்கான விதைகளை இடுவர்.

நமக்கு உணவு தரும் விவசாயத்திற்கு பயன்படும் அனைத்தையுமே தெய்வமாக வணங்கி விழா எடுத்து நன்றி தெரிவித்து  சிறப்பு செய்வது நம் தமிழர்களின் பழக்கம். சூரியனுக்கு பொங்கல், உழவனுக்கு உறுதுணையாக நிற்கும் மாட்டிற்கு மாட்டு பொங்கல், போன்று நீரிற்கு இந்த பதினெட்டாம் பெருக்கு.
இந்த நாளில் தான் அந்த வருடத்தில் திருமணமான புதுமண தம்பதிகள் தங்கள் முஹுர்த்த மாலைகளை நீரில் விடுவது வழக்கம்.

இது நம் முன்னோர்களால் மிக சிறப்பாக கொண்டாட பட்ட விழாக்களில் ஒன்று. இதை கல்கியின் பொன்னியின் செல்வனின் முதல் அத்தியாயத்திலேயே காணலாம்.
சோழ நாட்டில் இவ்விழாவை மக்கள் கொண்டாடி மகிழ்ந்த காட்சிகளை நம் மனக்கண்களுக்கு படம் போன்று அழகாக விவரித்திருப்பார்.

பொன்னியின் செல்வனில் இருந்து சில வரிகள்:

"ஆடி பதினெட்டாம் பெருக்கன்று சோழ நாட்டு நதிகளிலெல்லாம் வெள்ளம் இரு கரையை தொட்டுக் கொண்டு ஓடுவது வழக்கம் அந்த நதிகளிலிருந்து தண்ணீர் பெரும் ஏரிகள் பூரணமாக நிரம்பி கரையின் உச்சியை தொட்டு கொண்டு அலைமோதி கொண்டிருப்பது வழக்கம். வடகாவேரி என்று பக்தர்களாலும் கொள்ளிடம் என்று பொதுமக்களாலும் வழங்கப்பட்ட நதியிலிருந்து வடவாற்றின் வழியாக தண்ணீர் வந்து வீர நாராயணன் ஏரியில் பாய்ந்து அதை ஒரு பொங்கு கடலாக மாற்றியிருந்தது.அந்த ஏரியின் எழுபத்தி ஏழு கணவாய் வழியாகவும் தண்ணீர் குபுகுபுவென்று பாய்ந்து பக்கத்தில் நேடுதூரதுக்கு நீர்வளத்தை அளித்துக்கொண்டு இருந்தது.
அந்த ஏரி தண்ணீரை கொண்டு கண்ணுக்கு எட்டிய தூரம் கழனிகளில் உழவும், விரை தெளியும் , நடவும் நடந்து கொண்டு இருந்தன. உழுது கொண்டிருந்த குடியானவர்களும் நடவு நட்டுகொண்டிருந்த குடியான பெண்களும் இனிய இசைகளில் அங்கங்கே பாடி கொண்டிருந்தார்கள்.
            "வடவாறு பொங்கி வருகுது     
               வந்து பாருங்கள் பள்ளியரே! 
                   வெள்ளாறு விரைந்து வருகுது 
                       வேடிக்கை பாருங்கள் தோழியரே !!
                           காவேரி புரண்டு வருகிறது காண 
                               வாருங்கள் பாங்கியரே !!! "

கொண்டாடபடும் முறை:

இதை காவிரி நதி அல்லது அதன் கிளை நதிகளுக்கோ அல்லது நீர் தேக்கங்களுக்கோ  சென்று படைப்பது வழக்கம். எங்கள் ஊரில் இருந்து மணிகர்ணிகை என்ற கிளை நதி பக்கம் என்பதால் அங்கு சென்று படையல் செய்வோம்.

 சிறுவர்கள் அழகாக வண்ண காகிதங்களால் அலங்கரிக்கப் பட்ட தேர் போன்ற அமைப்புடைய சப்பர தட்டியை இழுத்து வருவர்.
சிலர் நொனாக்காய் மற்றும் தென்னை ஓலை குச்சிகளை வைத்து செய்யப்பட்ட சிறிய தேரை இழுத்து வருவதும் உண்டு.
பெண்கள் வீட்டிலிருந்தே பல கலவை சாதங்களை(சக்கரை பொங்கல், புளிசாதம், தயிர்சாதம் போன்றவை) நெய்வேத்தியமாக  கொண்டு வருவர்.
எள்ளு உருண்டை, மாவிளக்கு ஆகியவற்றையும் நெய்வேத்தியங்களாக படைப்பது வழக்கம்.

முதலில்ஆற்றின் கரை யோரத்தை சுத்தம் செய்து அங்கு நீர் தெளித்து அரிசி மாவால் கோலம் இட வேண்டும்.பின்பு ஆற்றின் அடியில்  இருந்து மண் எடுத்து எத்தனை சுமங்கலிகள் உள்ளனரோ அத்தனை  உருண்டைகளாய்  பிடித்து வைத்து அதற்கு  மஞ்சள் குங்கும போட்டு வைத்து பூக்களை வைக்க வேண்டும். இதையே  காவிரி அம்மனாக நினைத்து அதற்க்கு காதோலை கருகமணி(ரோஜா வர்ணம் அடித்த பனை ஒலை   சுருளில் சிறிய கருப்பு வளையல் கோர்க்க பாட்டிற்கும்), மஞ்சள் தடவிய நூல், போன்றவற்றை அணிவிக்க வேண்டும்.
பின்பு விளக்கை ஏற்றி வைத்து விட்டு அம்மனுக்கு முன்பு ஒரு தலை வாழை இலையில் வெற்றிலை பாக்கு , பழம்(பேரிக்காய் கட்டாயம் இருக்கும்), பூ, மஞ்சள் , குங்குமம், தேங்காய், போன்றவற்றை வைக்க வேண்டும்.பின்புறம் முகம் பார்க்கும் கண்ணாடியும் வைப்பர்.
(வீட்டிலேயே படைப்பவர்கள் மண்ணில் செய்வதற்கு பதில் மஞ்சளில் அம்மனை செய்து வழிபடலாம்.)

பின்பு வீட்டில் இருந்து தயார் செய்யப்பட்டு எடுத்து வந்த எள் உருண்டை , மாவிளக்கு,கலவை  சாதங்கள் போன்றவற்றை வைக்க வேண்டும். இதோடு சிறிது பச்சரிசியுடன் பயத்தம் பருப்பு(பாசி பருப்பு) சேர்த்து ஆற்று நீரில் கழுவி அதில் வெல்லம் கலந்து நிவேதியமாக படைக்க வேண்டும்.
படைக்கும் முன்பு, சுமங்கலிகள் தங்கள் கழுத்தில் வேறு நகையை அணிந்து கொண்டு  தங்கள் தாலியை காவிரி அம்மனுக்கு போட்டு படைத்த பின்பு அதை தங்கள் கணவன்மார்களின் கையினால் அணிந்து கொள்வார்கள்.
படைத்து முடித்ததும் அம்மன் மேல் இருந்த மஞ்சள் நூலினை எடுத்து ஆண்கள் கைகளிலும் ,பெண்கள் கழுத்திலும் அணிந்து கொளவார்கள்.
பின்பு அந்த அம்மனாக நினைத்து வழிபட்ட மண் உருண்டைளை ஆற்று நீரில் கரைத்து இந்த வருடமும் தங்களுக்கு  உறுதுணையாக இருந்து விவசாயம் வளம் பெற உதாவுமாறு  வேண்டிக்கொள்வார்கள்.

தற்போதைய நிலையில் ஆற்றில் தண்ணீர் வராததாலும், ஆற்றங்கரைக்கு சென்று படைக்கமுடியாததாலும்  வீட்டிலேயே மோட்டாருக்கும் கிணற்றுக்கும்  படைத்து  விட்டாலும்  உறவினர் நண்பர்களோடு குடும்பமாக சப்பரம் இழுத்து சென்று நுரை ததும்ப பெருக்கெடுத்து ஓடும் ஆற்றிற்கு படைத்து  வந்த நினைவுகள்  நிஜமாகவே  ஒரு அழகிய கனா காலமாகவே மனதில் பதிந்து உள்ளது.