Monday, 25 July 2016

வெள்ளி பிள்ளையார் வழிபாடு(Velli Pillaiyaar Vazhipaadu)



இது ஆடி(அ)தை(அ)மாசி  மாதத்தில் தான் நினைத்த காரியம் / வேண்டுதல் நிறைவேற விநாயகரை வேண்டி செய்யப்படும் ஒரு பூஜை ஆகும்.
இதை செவ்வாய் பிள்ளையார் பூஜை முடித்த வாரத்தில் வரும் வெள்ளிக் கிழமை அதிகாலை நேரம் அல்லது மாலை சூரிய அஸ்தமனத்திற்கு  பிறகு செய்யும் பூஜை ஆகும்.

முன்னொரு காலத்தில் ஒரு கணவன் , மனைவி தாழங்காட்டில்  உள்ள விநாயகரை நினைத்து செய்த வேண்டுதல் நிறைவேறியதாக ஒரு கதை உண்டு. அதேபோல் இந்த விநாயகரை நினைத்து இந்த  பூஜையை செய்தால் நம் கோரிக்கையையும் இறைவன் நிறைவேற்றி வைப்பார் என்று நம்பிக்கை.
இதற்கும் செவ்வாய் பிள்ளையாரை போன்று ஒரு ரகசிய (??) கதை உண்டு. இதையும் பூஜை நேரத்தை தவிர மற்ற நேரங்களில் சொல்ல கூடாது என்பது ஐதீகம்.

பூஜை செய்யும் முறை:

இதுவும் பெண்கள் மட்டுமே செய்யும் ஒரு பூஜை. ஆண்களுக்கு அனுமதி இல்லை. அதோடு இப்பூஜையில்  செய்யப்படும் சிறப்பு கொழுக்கட்டைகளையும் பெண்கள் மட்டுமே உண்ண வேண்டும்.
முதல் நாளே வீட்டை துடைத்து சுத்தம் செய்து பூஜை அறையில் ஈர மாவுக் கோலம் இட  வேண்டும்.
பின்பு ஒரு  கொழுக்கட்டை மாவில் செய்த பிள்ளையார்( ஒரு சிறிய பலகை போல் செய்து அதன் மேல் இரண்டு உருண்டைகளை வைக்க வேண்டும்), கொழுக்கட்டை அகல் விளக்குகள்(கொழுக்கட்டை மாவில் வில்லுக்கு போல் செய்து ஆவியில் வேகவைத்து எடுத்தது) ,கொழுக்கட்டை மாவில் செய்த சிறிய கன்று குட்டி,கன்றின் தலை, உடல், கால்கள், ஒரு ஆண் மற்றும்  ஒரு பெண் உருவம் ஆகியவற்றை  கொழுக்கட்டை பொம்மைகளாக  செய்து வேகவைத்து நெய்வேதியமாக  வைக்க வேண்டும்.

ஒன்பது அகல் விளக்குகள் செய்வது சிறப்பு.
இந்த கொழுக்கட்டைகளை பூஜையில் கலந்து கொள்ளும் பெண்கள் மட்டுமே உன்ன வேண்டும். மீதம் உள்ள மாவில் சிறு உருண்டைகள் அல்லது பிடி கொழுக்கட்டைகள் செய்து வீட்டில் உள்ள ஆண்களுக்கு பூஜை முடிந்த பிறகு கொடுக்கலாம்.

இந்த கொழுக்கட்டை பிள்ளையாரை ஒரு வாழை இலையில் வைத்து  மஞ்சள் குங்கும போட்டு வைத்து பூ, அருகம்புல்  வைக்க வேண்டும். பின்பு வெற்றிலை, பாகு, பழம், பூ, எலுமிச்சை பழம், சிறிய வாழைக் குருத்து,செவ்விளநீர் (சிவப்பாக உள்ள முழு இளநீர்), தாழன்செடி ,தாலிக்கொடி(வெற்றிலை வடிவில் இருக்கும் இலைகளை கொண்ட ஒரு கொடி வகை ) ஆகியவற்றை அந்த வாழை  இலையில் வைக்க வேண்டும். பின்பு செய்து வைத்த கொழுக்கட்டை அகல் விளக்கை நெய் விட்டு  ஏற்றி வெள்ளி பிள்ளையார் கதையை மூன்று முறை கூற வேண்டும். இரண்டு மூன்று  பெண்கள் சேர்ந்து செய்யும் பொழுது வயதில்  மூத்தவராக இருப்பவர் இந்த கதையை கூறுவார்.
நாம் நெய்வேத்தியத்திர்க்காக செய்யும் கொழுக்கட்டை வடிவங்களுக்கான விளக்கங்கள் அந்த கதையில் கூறப்படும் .
சூடம், சாம்பிராணி காட்டி பூஜையை முடிக்க வேண்டும்.
பின்பு பூஜை செய்த இடத்தில் உள்ள பொருட்களை நீர் நிலைகளான ஆற்றில் அல்லது குலத்திலோ  கரைத்து விடலாம்.

வெள்ளி பிள்ளையார் கொழுக்கட்டை செய்முறையை  கீழே உள்ள திரியில் காணலாம்.
வெள்ளி பிள்ளையார் கொழுக்கட்டை

செவ்வாய் பிள்ளையார் வழிபாடு பற்றிய தகவல்களையும், பூஜை செய்யும் முறையும் கீழே உள்ள திரியில் கொடுத்துள்ளேன்.
செவ்வாய் பிள்ளையார் பூஜை

1 comment:

  1. வெள்ளி பிள்ளையார் கதை தயவுசெய்து பதிவிடுமாறு கேட்டு கொள்கிறேன். ரம்யா

    ReplyDelete