Monday, 12 March 2018

காரடையான் நோன்பு (Karadaiyaan Nonbu procedure and details)

காரடையான் நோன்பு தமிழ் நாட்டில் பெண்களால் கடைபிடிக்க படும் ஒரு நோன்பு விழா. இது தங்கள் கணவரின் நலனுக்காகவும், அவர் தங்களை விட்டு ஒரு பொதும் பிரியாதிருக்கவும் திருமண மான பெண்கள் அம்மனை பிரார்த்திக்கும் ஒரு நோன்பு. திருமணம் ஆகாத பெண்கள் நல்ல கணவர் கிடைக்கவும், இந்த நோன்பை நோற்பது வழக்கம். இது ஒவ்வொரு வருடமும் தமிழ் மாதமான மாசி முடிந்து பங்குனி துவங்கும் நேரத்தில் செய்யப்படும் பூஜை. அன்றைய  நாள் சூரிய உதயத்தில் இருந்து உண்ணா நோன்பு இருந்து , மாசி முடிந்து பங்குனி துவங்கும் நேரத்தில் கார அடை (காரடையான் நோன்பு அடை) செய்து இறைவனுக்கு  படைத்து விரதத்தை முடிக்க வேண்டும்.

நோன்பு அடை செய்முறைக்கு பின் வரும் லிங்க்ஐ  சொடுக்கவும்.
காரடையான் நோன்பு அடை செய்முறை மற்றும்  வீடியோ.

பூஜை நேரம்:
இது முன்பே குறிப்பிட்டது போல மாசி முடிந்து பங்குனி மாதம் பிறக்கும் பொழுது செய்யப்படும் பூஜை. எனவே ஒவ்வொரு வருடமும் பூஜை நேரம் மாறுபட வாய்ப்புள்ளது.
இந்த வருடம் பங்குனி மாதம் நள்ளிரவு நேரம் பிறக்கிறது. இரவு நேரங்களில் பூஜை செய்வது அத்தனை உகந்தது அல்ல. எனவே இந்த வருடம் இரவு 7 மணி முதல் 8 மணிக்குள் பூஜையை முடித்து விட வேண்டும்.

March 14 2018 - 7 pm to 8 pm

இந்த நேரத்தில் பூஜை செய்ய முடியாதவர்கள் அடுத்து பங்குனி மாதத்தில் வரும் முதல் செவ்வாய் அல்லது வெள்ளி கிழமைகளில் நல்ல நேரத்தில் செய்யலாம்.

நோன்பு பின் உள்ள கதை :
முதலில் இந்த நோன்பின் பின் குறிப்பிடப்படும் கதையை சுருக்கமாக பார்க்கலாம்.
முன்னொரு காலத்தில் சாவித்ரி என்ற ராஜ குல பெண் ஒரு வருடமே தன் தன் கணவனின் ஆயுட்காலம் என்று அறிந்தும்  சத்தியவானை விரும்பி மணந்து சந்தோஷமாக வாழ்த்து வந்தாள். அரண்மனை சுக போகங்களுக்கு பழகி இருந்தாலும் கணவனே கண் கண்ட தெய்வம் என்று அவனுடன் அன்பாக வாழ்ந்து வந்தாள்.
இவ்வாறு சென்று கொண்டிருந்த வாழ்வில், சத்தியவானின் இறுதி நாளும் வந்தது. எமதர்மன் தன் பாச கயிற்றை வீசி சத்தியவானின் உயிரை பறித்து கொண்டு சென்றார். பத்தினி பெண்ணான சாவித்ரியின் கண்களுக்கு எமன் தெரியவே அவரை விடாமல் பின் தொடர்ந்து சென்றாள். சாவித்ரியின் தைரியத்தையும், கணவனின் மேல் கொண்ட அன்பையும் கண்டு மனம் கனிந்த எமராஜா அவள் கண்களுக்கு காட்சி கொடுத்து அவளை இது தான் விதி, முன்பே எழுதப்பட்டது , அதனால் உன் கணவனின் உயிரை திரும்ப பெற முடியாது, எனவே நீ திரும்பி செல் என அறிவுறுத்தினார்.
கற்புக்கரசி சாவித்ரியோ அவரின் கட்டளையை மீறி, திரும்பி போக  மறுத்தாள். அவளின்  பக்தி மற்றும் அன்பையும் கண்டு இதயம் கனிந்த எமன் சாவித்ரியிடம், உன் கணவனின் உயிரை தவிர வேறு ஏதேனும் வரம் கேள் தருகிறேன் என்றார். அன்பும் பண்பும் அறிவு கூர்மையும் ஒருங்கே பெற்ற சாவித்ரி எமனிடம் என் குலம் வாழை அடி வாழையாக தழைக்க வேண்டும், அதற்கு  வரம் தாருங்கள் என்றாள். எமனும் சற்றும் யோசிக்காமல் அவளுக்கு அந்த வரத்தினை தந்தார்.
குழந்தை இல்லாமல் இருந்த சாவித்ரிக்கு, அவள் கேட்ட வரம் நிறை வேற வேண்டுமானால் அவள் கணவன் உயிருடன் வர வேண்டும் என்று சாவித்ரி கூறியதை கேட்ட எமதர்மன் அதிர்ந்து பின் வேறு வழி இல்லாமல் சத்தியவானின் உயிரை அங்கேயே விட்டு சென்றார்.
சத்யவான் பிழைத்து எழுந்ததும் கடவுளுக்கும் யமதர்மனுக்கும் நன்றி சொல்லும் விதமாக உடனே தன் வீட்டில் இருந்த கார் அரிசியையும் வெள்ளமும், பருப்பையும் சேர்த்து அடை போல் செய்து உருகாத வெண்ணையும் வைத்து கடவுளுக்கு படைத்தாள். ஒரு மஞ்சள் கயிரையும் வைத்து பூஜை செய்து கணவன் கைகளால் அணிந்து கொண்டாள்
விதியை தன் மதியால் வென்ற சாவித்ரியியை நினைவு கூர்ந்து , தங்கள் கணவரையும் ஒரு நாளும் பிரியாதிருக்க வேண்டும் என்றும்  நோன்பு நோற்று பிரார்த்திக்கும் பண்டிகையே இந்த காரடையான் நோன்பு.
சாவித்ரி செய்தது போலவே பச்சரிசியை வைத்து  அடை செய்து மஞ்சள் நூல் வைத்து பூஜை செய்து அணிந்து கொள்வது வழக்கம்.

நோன்பு நோற்கும் முறை:

மாசி முடிந்து பங்குனி துவங்கும் நாளில் (இந்த வருடம் மார்ச் 14 ) அன்று அதிகாலையில் எழுந்து தலை குளித்து வீட்டை துடைத்து சுத்தம் செய்ய வேண்டும். அன்று முழுவதும் (பங்குனி பிறக்கும் நேரம் வரை) உபவாசம் இருக்க வேண்டும்.
வீட்டின் முன்பும் பூஜை அறையிலும் மாக்கோலம் இட வேண்டும்.
பின்பு அரிசியை ஊற வைத்து மாவு தயார் செய்து காராமணி பருப்பு சேர்த்து அடை (கொழுக்கட்டை) செய்து வைக்க வேண்டும்.
முன்பே தயார் செய்து வைத்த அல்லது கடைகளில் வாங்கிய அரிசி மாவிலும் செய்வதுண்டு. ஆனால் புதிதாக செய்த அரிசி  மாவில் செய்வதே சிறப்பு.

பூஜை கு உரிய நேரத்தில் பூஜை அறையில் ஒரு நுனி வாழை இலையை போட்டு அதில் நுனி பகுதியில் உடைத்த தேங்காய், வெற்றிலை பாக்கு பழம் வைக்கவும். அதோடு வீட்டில் உள்ள பெண்களில் எண்ணிக்கையோடு ஒன்று கூடுதலாக( அம்மனுக்காக ) சேர்த்து மஞ்சள் நூல்களை தயார் செய்து நடுவில் ஒரு பூவை கோர்த்து வெற்றிலை மேல் வைக்கவும்.

மஞ்சள் பொடியை நீரில் கரைத்து நூல்களின் மேல் தடவினால் மஞ்சள் கயிறு தயார். வீட்டில் உள்ள பெண்கள் அனைவரும் பூஜையின் பின் இந்த கயிறை அணிந்து கொள்ள வேண்டும். திருமணம் ஆனவர்கள் கழுத்திலும், கன்னி பெண்கள் கைகளிலும் இந்த கயிறை அணிந்து கொள்ள வேண்டும்.

அதே இலையில் நடுவில் செய்து வைத்த கார் அடை மற்றும் உருகாத வெண்ணையும் வைக்க வேண்டும்.

பின்பு சூடம் , சாம்பிராணி தூபம் காட்டி நீர் விட்டு நெய்வேத்தியம் செய்து
பின்வரும் ஸ்லோகங்களை சொல்லி நமஸ்கரிக்கவும்.

உருகாகத வெண்ணையும் ஓரடையும் நோற்று உனக்கு நான் வைத்தேன் , ஒருநாளும் என் கணவர் என்னை  பிரியாதிருக்க அருள் புரிவாய் தாயே !!!!

பின்பு  ஒரு கயிறை அம்மன் படத்திற்க்கு மாட்டி விட்டு , மற்றவற்றை  அணைத்து பெண்களும்  அணிய வேண்டும். வயதான சுமங்கலி பெண்கள் இருந்தால் அவர்கள் கைகளால் அணிவித்து கொள்வது சிறப்பு.

மஞ்சள் கயிறை அணிவித்து கொள்ளும் பொழுது பின் வரும் மந்திரத்தை  சொல்லியும்  அணிந்து கொள்ளலாம்.

தோ³ரம்ʼ க்³ருʼஹ்ணாமி ஸுப⁴கே³ ஸஹாரித்³ரம் த⁴ராம்யஹம் | 
ப⁴ர்து²: ஆயுஸ்² ஸித்³த்⁴யர்த²ம்ʼ ஸுப்ரீதா ப⁴வ ஸர்வதா³ ||

(5  நாட்கள் கழித்து இந்த கயிறை எடுத்து நீர் நிலைகளிலோ, செடியின் வேரிலோ போட்டு விடலாம். தாலி சரடிலும் சுற்றி  கொள்ளலாம்.)

மாக்கோலம் இடும் முறை அறிய பின் வரும் லிங்க் ஐ சொடுக்கவும்.


இது நான் வழிபடும் முறை ஆகும். சிலர் கும்பம் வைத்தும் , அதை அம்பாளாக பாவித்து வழிப்படுத்தும் உண்டு.

இதில் ஏதேனும் விடு பட்டிருந்தால் பின்னூட்டத்தில் குறிப்பிடவும்.

நன்றி!!

No comments:

Post a Comment